கோலாலம்பூர்,மலேசியா முழுவதும் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான தகவல்கள், தரவுகள், பள்ளி சார்ந்த அண்மைய செய்திகளை ஒரே தளத்தில் இணைக்கும் “SJKT CONNECT” ஓரிய இலக்கவியல் தரவுத்தளம் இன்று கோலாலம்பூர் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் அதிகாரப்படியாக அறிமுகம் கண்டது.
மலேசியத் தமிழ் அறவாரியமும் இந்திய அரசுசாரா அமைப்புகளின் கூட்டமைப்பு (ACE)-சும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம், தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியங்களின் கூட்டமைப்பு மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் தேசிய சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்றது.
மலேசியாவின் 11 மாநிலங்களிலும் 122 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமைந்துள்ள 528 தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் ஒரே இடத்தில் தொகுத்து, பள்ளிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த தகவல் தளம் இதுவரை இல்லாதிருந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில் SJKT CONNECT உருவாக்கப்பட்டுள்ளது.
உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு (Generative AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இத்தளம், வெறும் தகவல் சேகரிப்புத் தளமாக இல்லாமல், தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான ஆக அண்மைய மேம்பாடுகளையும் சவால்களையும் தொடர்ந்து கண்காணித்து, அவற்றைத் தரவுகளுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் சமூக ஓரிய தரவுத் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


SJKT CONNECT தரவுத் தளத்தில்,
1. நாடாளுமன்ற மக்களவை கூட்டப் பதிவுகள் & தேசிய ஊடகச் செய்திகளில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான தகவல்கள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு தொகுக்கப்படும்
2. அடையாளம் காணப்படும் தகவல்கள் தொடர்புடைய தமிழ்ப்பள்ளி & நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்படும்;
3. ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும் மூன்று மொழிகளில் பள்ளிச் சுயவிவரத் தரவுத்தளம் உருவாக்கப்படும்;
4. பள்ளிகள் தங்களது அதிகாரப்படி @moe.edu.my மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி பள்ளித் தகவல்களைப் புதுப்பிக்க வழிவகை செய்யப்படும்;
5. தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்புடைய தரப்பினரின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படும்;
6. ஆய்வு, கொள்கை பகுப்பாய்வு மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் பொது API வழியாக திறந்த தரவுகளாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
SJKT CONNECT அறிமுகத்துடன் இணைந்து, “தமிழ்ப்பள்ளிக் கல்வி: வாய்ப்புகளை விரிவுபடுத்தி, தரத்தை மேம்படுத்தி, எதிர்காலத்தை உறுதிசெய்வோம்” என்ற கருப்பொருளில் சிறப்புக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மலாயாப் பல்கலைக்கழக, மொழி, மொழியியல் புலத்தின் மலேசிய மொழிகள் & பயன்பாட்டு மொழியியல் துறைத் தலைவர் முனைவர் சி.ம. இளந்தமிழ், கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் திரு. குமார் சிதம்பரம், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி சிறப்பு செயலாக்க குழு உறுப்பினரும், சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவருமான திரு. சுகுமாரன் முத்துசாமி ஆகியோர் பேச்சாளர்களாக பங்கேற்றனர். நெறியாளராக ACE அமைப்பின் “உண்மை உரைப்போம்” வலையொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. பார்த்திபன் இராமச்சந்திரன் கலந்துரையாடலை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
தமிழ்ப்பள்ளிகளில் கல்விக்கான அணுகல், மாணவர் சேர்க்கை, கல்வித் தரம், பள்ளிகளின் நீடித்த நிலைத்தன்மை, எதிர்காலத் தேவைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமை – நிரந்தரத் தீர்வுகள், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் இடமாற்றத் தேவைகள், பாலர்பள்ளிகள், இலக்கவியல், கணினி, அறிவியல் ஆய்வகங்களின் பற்றாக்குறை, மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தர மேம்பாடு போன்ற அம்சங்கள் குறித்து கருத்துகள் பகிரப்பட்டன.


இன்றும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு முந்தைய தலைமுறையினரின் போராட்டம் குறித்து வலியுறுத்தப்பட்டதோடு; சமூகம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்ப்பள்ளிகளின் தொடர் மேம்பாட்டினை உறுதி செய்ய முடியும் எனவும் கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டது.
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக நிகராளிகள், முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகிய பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தைத் தரவுகளின் அடிப்படையில் திட்டமிடுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
SJKT CONNECT மூலம் தமிழ்ப்பள்ளிகளின் தேவைகள், வசதிக் குறைபாடுகள் மற்றும் மேம்பாட்டுத் தேவைகளை மேலும் வெளிப்படையாகப் பதிவு செய்ய முடியும். பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை தொடக்க நிலையிலேயே அடையாளம் காண்பதற்கும், அவற்றுக்கான தீர்வுகளை உரிய தரப்பினரிடம் எடுத்துச் செல்லவும் இத்தளம் துணைபுரியும்.
மேலும், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாளர் வாரியங்கள், முன்னாள் மாணவர்கள், அரசு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையிலான தரவு சார்ந்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும் SJKT CONNECT-இன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
ஒரு பள்ளியின் முன்னேற்றம் அதன் நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல; அது முழுச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில், தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான நம்பகத்தன்மைமிக்க தகவல்களையும் தரவுகளையும் சமூகத்தின் கைகளுக்குக் கொண்டுவந்து, அவற்றை பொருள் பொதிந்த விவாதம், திட்டமிடல், விளைபயன்மிக்க நடவடிக்கைகளாக மாற்றுவதற்கான புதிய தொடக்கமாக SJKT CONNECT அமையும்.
தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்காலத் தேவைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறைகளுக்காக தமிழ்ப்பள்ளிகளின் தொடர்ச்சியையும் கல்வித் தரத்தையும் உறுதிசெய்ய உதவும் நீண்டகால சமூக,கல்வித் தரவுக் கட்டமைப்பாக SJKT CONNECT மேம்படுத்தப்படும்.



