
“குடும்பக் கௌரவத்திற்காகப் பல தசாப்தங்களாக வன்முறைகளைப் பொறுத்துக்கொண்டேன்,” என்று கூறும் பால்ஜிந்தர் கவுர், தனது 20 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையை எப்படிக் முடிவுக்குக் கொண்டுவந்தார், தனது வாழ்க்கையை எவ்வாறு மீட்டெடுத்தார் மற்றும் தற்போது அவர் அனுபவித்து வரும் ‘அமைதியான’ வாழ்க்கையை எப்படிப் பதிவு செய்கிறார் என்பது குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இறுதியாகத் தனக்காக வாழத் தொடங்கிய இந்த ‘ஆண்ட்டி’யைச் சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
கடந்த மே 16 அன்று, பால்ஜிந்தர் கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “52 வயதில் கணவரை விட்டு வெளியேறிய பின் நிம்மதியான வாழ்க்கை” (Peaceful life after leaving my husband at 52) என்ற தலைப்பில் வெளியிட்ட குறுகிய வீடியோ, குடும்ப வன்முறைகளுக்குள் சிக்கித் தவிக்கும் பல பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கைக் கீற்றாக மாறியுள்ளது. அதற்கு அவர், “அமைதி. இறுதியாக எனக்காக நான் எடுத்த முடிவு,” என்று தலைப்பிட்டுள்ளார்.
அந்தக் குறுகிய வீடியோ மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. அதில், பால்ஜிந்தர் தனது காலைக் கடமைகளைத் தனியாகச் செய்வதைக் காண முடிகிறது – முகத்தைத் துடைப்பது, பால் பானம் தயாரிப்பது மற்றும் தனது வீட்டு பால்கனியில் துணிகளை உலர்த்துவது போன்ற அன்றாடச் செயல்களில் அவர் ஈடுபடுகிறார். எனினும், அவரது முகபாவனையே உண்மைக் கதையைக் கூறுகிறது. அவரது தோள்களில் ஒரு புதிய இலகுத்தன்மையும், கண்களில் நிதானமான அமைதியும் தெரிகின்றன. இந்த அன்றாட வேலைகள் இப்போது அவருக்குப் சுமையாக இல்லாமல், கடினமாகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் கொண்டாட்டமாக மாறியுள்ளன.
இந்த வீடியோ அவரது தற்போதைய அமைதியைக் காட்டினாலும், ‘தி பெட்டர் இந்தியா’ (The Better India) ஊடகம் கடந்த மே 19 அன்று பகிர்ந்த அவரது வாழ்க்கையைப் பற்றிய நீண்ட, நெருக்கமான மற்றொரு வீடியோ, அதற்கு முன்பு அவர் அனுபவித்த ‘பல தசாப்த காலத் துயரங்களை’ வெளிப்படுத்துகிறது. சிறு வயதிலேயே இழப்பு, மறுமணம் மற்றும் வன்முறைச் சுழற்சி எனப் பல பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்களின் நேரடிப் பிரதிபலிப்பாகவே பால்ஜிந்தரின் பயணம் அமைந்துள்ளது.
மூன்று வயது மகளுடன் இளம் வயதிலேயே கணவரை இழந்த பால்ஜிந்தர், ஆரம்பத்தில் மறுமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இருப்பினும், ‘ஒரு மகளுக்குத் தந்தை தேவை’ என்ற சமூகத்தின் இடைவிடாத வற்புறுத்தலால், 33 வயதில் அவரது குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். திருமணமான இரண்டு நாட்களிலேயே அவரது இரண்டாவது கணவரின் ‘நல்லவர்’ என்ற முகமூடி கிழிந்ததாக அவர் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, பால்ஜிந்தர் தனது கணவரின் குடிப்பழக்கத்தையும், அதனால் ஏற்பட்ட உடல்ரீதியான வன்முறைகளையும் சகித்துக் கொண்டு வாழ்ந்துள்ளார்.
பல தாய்களைப் போலவே, பால்ஜிந்தரும் தனது மகளின் நலனுக்காகவும் ‘திருமணத்தைக் காப்பாற்றுவதற்காகவும்’ அங்கேயே தங்கியிருந்தார். ஆனால், கணவனின் வன்முறை தனது மகளை நோக்கியும் நீடித்தபோதுதான் அவர் பொறுமையின் எல்லைக்கே சென்றார். அதன் பிறகும், பால்ஜிந்தர் அந்த நரகத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் தேவைப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகளுக்குப் பாதுகாப்பாகத் திருமணம் செய்து முடித்த பிறகு, பால்ஜிந்தர் தனது கணவரை இறுதியாக எதிர்கொண்டார். ஏற்பட்ட ஒரு கடுமையான வன்முறை மோதலுக்குப் பிறகு, அவர் தனது வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் தனது மகள் மற்றும் மருமகனின் ஆதரவோடு, அவர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.
பால்ஜிந்தரின் இந்த நெகிழ்ச்சியான வாழ்விடம் குறித்த செய்தி, சமூக வலைத்தளங்கள் முழுவதும் பெரும் அனுதாப அலையையும், ஒட்டுமொத்தப் பெண்களின் ஆதரவையும் தூண்டியுள்ளது. பாரம்பரியச் சமூகங்களில், ‘வயதான காலத்தில் விவாகரத்து’ செய்வது என்ற ரகசியமாகப் பேசப்படும் தலைப்பைப் பற்றிப் பகிரங்கமாக விவாதிப்பதற்கான ஒரு முக்கியத் தளமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது மாறியுள்ளது.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எந்த வயதிலும் உங்களை நீங்களே மறுவடிவமைப்புச் செய்து (Reinvent) கொள்ள முடியும் என்பதை இந்த ‘ஆண்ட்டி’ தனது தலைமுறைக்குக் காட்டியுள்ளார். இதைப் பார்ப்பதற்கே மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது!” என்று எழுதியுள்ளார். மற்ற பல கருத்துகளும் இதே உணர்வை எதிரொலித்துள்ளன. பால்ஜிந்தரின் இந்தத் துணிச்சல் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக (Blueprint) விளங்குவதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர். “உங்களைப் பார்த்துப் பலரும் ஊக்கம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்; சுயமரியாதைதான் எல்லாவற்றையும் விட முக்கியம்,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, “உங்களது துணிச்சலுக்கு என் மரியாதைகள்; வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்குவதற்கு எப்போதும் தாமதமாகிவிடுவதில்லை,” என்று பாராட்டியுள்ளார்.
பால்ஜிந்தரின் இந்தப் பயணம் என்பது அவரது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறிந்தால், குறிப்பாக 50 வயதிற்குப் பிறகு அவளது வாழ்க்கை ‘முடிந்துவிட்டது’ என்று கருதும் சமூகத்தின் கலாச்சாரக் களங்கத்திற்கு (Cultural Stigma) விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும்.
தனது காலை நேரத் தேநீர் அருந்துதல் மற்றும் அன்றாடத் துணி துவைக்கும் நடைமுறைகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலம், ஒரு பெண் தனியாக வாழ்வது தவறான விஷயம் அல்ல என்பதை அவர் நிரூபித்துள்ளார். அத்துடன், வயது வித்தியாசமின்றி மன அமைதி என்பது அனைவரும் பின்தொடர வேண்டிய ஒரு உன்னதமான இலக்கு என்பதையும் அவர் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

