1) தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணுவதுடன் பணிகள் தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து, காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சுமார் 10,000 பணியாளர்கள் மற்றும் 4,600-க்கும் மேற்பட்ட நுண் பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரத்தை, கீழே இணைக்கப்படும் லிங்க்-ல் காணலாம்…
2) புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்.டி.ஏ. கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் பலப்பரீட்சை நடத்திய சூழலில், வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. புதுச்சேரியில் 6 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3) மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, ஃபால்டா தொகுதிக்குட்பட்ட 285 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஃபால்டா தொகுதி தவிர்த்து 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த 293 சட்டமன்றத் தொகுதிகளுக்காக 77 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை மேற்கு வங்கத்தில் 92.47% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்கத்தில் பதிவான அதிகபட்ச வாக்குகள் இதுதான் எனக் கூறப்படுகிறது. மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரத்தை, கீழே இணைக்கப்படும் லிங்க்-ல் காணலாம்…
4) கேரளம்: கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்குமா அல்லது கங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கே தற்போது ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF) இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (LDF) இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது. கடந்த இரண்டு முறையாக இங்கே இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்து வருகிறது. இருப்பினும் 2024 மக்களவைத் தேர்தலிலும், சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. பாஜக கூட்டணியும் மாநிலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. எனவே இன்றைய தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. கேரள வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரத்தை, கீழே இணைக்கப்படும் லிங்க்-ல் காணலாம்…
5) அசாம்: அசாமில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், மக்கள் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. இங்குள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 40 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அசாமில் 85.96% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அசாம் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரத்தை, கீழே இணைக்கப்படும் லிங்க்-ல் காணலாம்…
அனைத்து மாநிலங்களிலும் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன என்பதை கீழ்வரும் நேரலையில் ஆங்கிலத்தில் காணலாம்….
இன்று வாக்கு எண்ணும் நடக்கும் 4 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசங்களிலுள்ள அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்முனைப் பாதுகாப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தடுப்பதற்காக, தேர்தல் ஆணையம் முதல் முறையாக கியூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அமல்படுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கைபேசிகளுக்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேரலையில்:
அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மாநில அளவில் மட்டுமன்றி, தேசிய அரசியலிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் நிலை, அசாமில் பாஜகவின் செல்வாக்கு, கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பலம், தமிழ்நாட்டில் விஜய்யின் தவெக பெறும் வாக்குகள் ஆகியவை நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

