Last Updated:
தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் அதன் எல்லையில் உள்ள 12 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 5 மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் 650 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மார்ச் 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் அதன் எல்லையில் உள்ள 12 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், 5 ஆயிரத்து 173 பறக்கும் படைகளும், 5 ஆயிரத்து 200 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேற்கு வங்கத்தில் மிக அதிக அளவாக 11 கோடி ரூபாய் ரொக்கம், 55 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 150 கோடி ரூபாய் பரிசுப் பொருட்கள் உள்பட 319 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் ரொக்கம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 67 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் மற்றும் 63 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உள்பட 170 கோடி ரூபாய் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் அஸ்ஸாமில் 97 கோடி ரூபாய், கேரளாவில் 58 கோடி ரூபாய் மற்றும் புதுச்சேரியில் 7 கோடி ரூபாய் என 650 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மது மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


