புதுடெல்லி: உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்தியஅரசு கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தற்போது மத்திய அரசு 6 அண்டை நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிஷீயஸ், இலங்கை ஆகிய 6 அண்டை நாடுகளுக்கு 99,150 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் கூறுகையில், “2022-23 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24 ஆண்டில் வெங்காய உற்பத்தி குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது 6 அண்டை நாடுகளுக்கு 99,150 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் இந்த ஏற்றுமதி மேற்கொள்ளப்படும். ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் சந்தை விலை, சர்வதேச மற்றும் இந்திய சந்தை விலைகளைக் கணக்கில் கொண்டு ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்படும்.
நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனால், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து அதிக அளவில் வெங்காய ஏற்றுமதி மேற்கொள்ளப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இது தவிர்த்து ஏற்றுமதிக்காக விசேஷமாக பயிரிடப்பட்ட 2,000 டன் வெள்ளை வெங்காயத்தை மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.