Last Updated:
பாகிஸ்தான் 5 விமானங்கள் சுட்டுவீழ்த்தியதாக டிரம்ப் கூறியதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, மோடி தெளிவான அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 5 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக தெளிவான அறிக்கை அளிக்க எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. மோதலின் போது இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்ததை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தான் தலையீட்டு மோதலை நிறுத்தியதாகவும் டிரம்ப் கூறியது பூதாகரமானது.
டிரம்ப் பேசிய வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடி ஜி, 5 ஜெட் விமானங்கள் பின்னணியில் உள்ள உண்மை என்ன?, தேசம் அதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது என வினவியுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், இந்தியா – பாகிஸ்தான் மோதல் வெடித்து 70 நாட்கள் கடந்த பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய புயலை வீசுவதன் பின்னணி என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களவை கூட்டத் தொடரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது குறித்து பிரதமர் மோடி தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஓர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, இந்தியா குறைந்தது ஒரு ரஃபேல் விமானத்தை இழந்துவிட்டது என எண்ணிக் கொண்டு இருக்கும் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக கூறுவது ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற அவசியம் எழுந்துள்ளதாக கூறினார்.
அதேநேரம், எந்த நாட்டின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என டிரம்ப் கூறவில்லை எனத் தெரிவித்த பாஜக ஐடி விங் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா, பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர் போல் ராகுல் காந்தி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
July 20, 2025 12:31 PM IST
5 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? ட்ரம்ப் பேச்சால் எழுந்த சர்ச்சை… மத்திய அரசு விளக்கம்!