Last Updated:
நீங்கள் எந்தவித பெரிய ரிஸ்க்கும் எடுக்காமல் உங்கள் சேமிப்பை அதிகரிக்க உதவும் பாதுகாப்பான வழியைத் தேடுகிறீர்கள் என்றால், இங்கே நாம் பார்க்கப் போகும் அரசு ஆதரவு திட்டம் உங்களுக்கு சரியானதாக இருக்கலாம்.
நாட்டில் தபால் அலுவலகம் மூலம் நடத்தப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC – National Savings Certificate) திட்டமானது, வரி சலுகைகளுடன் உத்தரவாதமான வருமானத்தை விரும்புவோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு திட்டம் ஆகும்.
NSC என்பது மத்திய அரசு ஆதரவுடன் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் நடத்தப்படும் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது, எனவே, சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. NSC திட்டத்திற்கு நடப்பு காலாண்டில், ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதம் அரசால் காலாண்டு திருத்தங்களுக்கு உட்பட்டது என்பதால், பிற திட்டங்களுக்கு மத்தியில் இது போட்டித் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்கிறது. இதனுடன், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளையும் பெறலாம்.
NSC திட்டத்தின் முக்கிய அம்சம் வசீகரம் அதன் காம்பவுண்டிங் எஃபெக்டில் (compounding effect) உள்ளது. தற்போதைய வட்டி விகிதத்தின்படி, ஒருவர் ரூ.25 லட்சம் முதலீடு செய்தால் அது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.36.47 லட்சமாக வளரக் கூடும். இதன் மூலம் ஐந்தே ஆண்டுகளில் வட்டி மூலம் சுமார் ரூ.11.47 லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
வெறும் ரூ.1,000 உடன் NSC அக்கவுண்ட்டை ஒருவர் திறக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை என்பதால், நீங்கள் விரும்பும் அளவுக்கு உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். NSC அக்கவுண்ட் ஓபன் செய்ய உங்களின் சில அடிப்படை KYC ஆவணங்களுடன் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்றால் போதும். ஒருவேளை மைனர் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டால், அந்த மைனர் 18 வயதை அடையும்போது அது முதிர்ச்சியடையும். இந்த நெகிழ்வுத்தன்மை குடும்பங்கள் தங்கள் எதிர்கால நிதித் தேவைகளை திறம்பட திட்டமிட அனுமதிப்பதோடு, நீண்ட கால சேமிப்பிற்கான பாதுகாப்பான விருப்பத்தை வழங்குகிறது.
சேமிப்பு மீதான சலுகைகளை தவிர, வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மூலம் பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கு NSC சான்றிதழ்கள் பிணையமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதனால் இந்த அம்சம், தங்கள் சேமிப்பை சமரசம் செய்யாமல் நிதியை அணுக வேண்டிய முதலீட்டாளர்களுக்கு நிதி ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது. கடன்களுக்கு NSC சான்றிதழ்களைப் பயன்படுத்துவது என்பது கடன் அத்தியாவசியமாக தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்யலாம்.
பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் விரும்புவோருக்கு இந்தத் திட்டம் சிறந்தது. தங்கள் சேமிப்பை வளர்த்து, அதே நேரத்தில் வரியைச் சேமிக்க விரும்பும் சிறு மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு NSC ஒரு நல்ல தேர்வாகும். எனவே, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க ஒரு பாதுகாப்பான வழியை தேடுகிறீர்கள் என்றால், அஞ்சல் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை கருத்தில் கொள்ளலாம்.
July 31, 2025 6:26 PM IST
5 ஆண்டுகளில் ரூ.36 லட்சம்…! உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் அரசின் சிறந்த சேமிப்பு திட்டம்…