சேமிப்பு மற்றும் முதலீடு என்று வரும்போது, தபால் அலுவலகம் இரண்டு பிரபலமான விருப்பங்களை வழங்குகிறது. அதில், ஒன்று நிலையான வைப்புத்தொகை (FD) மற்றொன்று தொடர்ச்சியான வைப்புத் தொகை (RD) ஆபத்து இல்லாமல் வருமானத்தைப் பெற விரும்புபவர்களின் முதல் தேர்வாக இந்த இரு சேமிப்பு திட்டங்களும் இருந்து வருகின்றன.
நிலையான வைப்புத்தொகை (FD) என்பது, ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்யும் விருப்பமாகும். அதே நேரத்தில் தொடர் வைப்புத்தொகை (RD) என்பது, மக்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் விருப்பத்தை வழங்குகிறது. இந்த பதிவில் தொடர் வைப்புத் தொகையில் முதலீடு செய்து என்ன பலன்களைப் பெற முடியும் என்பதை தெரிந்து கொள்வோம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஐந்தாண்டுகளில் ரூ.15 லட்சம் பெறுவது எப்படி என்பது பற்றி இனி பார்ப்போம்.
தபால் அலுவலக தொடர் வைப்புத் தொகையில், நீங்கள் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.21,000 முதலீடு செய்தால், முதிர்ச்சியின்போது ரூ.14,98,682 பெற முடியும்.
மொத்த முதலீடு: ரூ.12,60,000
மொத்த வட்டி: ரூ.2,38,682
இந்த திட்டத்தில் பெரிய தொகை இல்லாமலும் முதலீடு செய்யலாம். உதாரணமாக, மாதம் ரூ.100 முதலீடு செய்வது மூலமாகவே நீங்கள் தொடர் வைப்புத்தொகை (RD) திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டம் சேமிப்பின் மீதான ஒழுக்கம் மற்றும் பொறுமை நமக்கு கற்றுத் தருவதுடன், முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நன்மைகளையும் வழங்குகிறது.
தற்போது தபால் அலுவலக RD-க்கு வருடாந்திர வட்டி விகிதம் 6.7% வழங்கப்படுகிறது. இது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டுத் தொகையாக கணக்கிடப்படுகிறது. இதில் முதலீடு செய்வதற்கென அதிகபட்ச வரம்பு என்று ஏதும் இல்லை.
முதன்மை காலமான 5 ஆண்டுகள் முடிந்தவுடன், தேவைப்பட்டால் தொடர் வைப்புத் தொகையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். மேலும், தபால் அலுவலக RD கணக்கில் நீங்கள் தொடர்ச்சியாக 12 மாதங்கள் முதலீடு செய்திருந்தால், அதற்குப் பிறகு நீங்கள் சேமித்த தொகையில் இருந்து 50% வரை கடனாக பெறலாம். இந்தக் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம், உங்கள் RD-க்கு வழங்கப்படும் நடப்பு வட்டி விகிதத்தில் மேலும் 2% சேர்த்து கணக்கிடப்படும்.
உதாரணமாக: தற்போது RD வட்டி விகிதம் 6.7% என்றால், கடன் வட்டி விகிதம் 8.7%ஆக இருக்கும்.
இது தற்காலிக நிதி தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், உங்கள் முதலீட்டை முழுவதுமாக எடுக்காமல் உங்களது தேவையை நிர்வகிக்க உதவும்.
RD-ஐ மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், அதாவது மொத்தம் 10 ஆண்டுகள் நீட்டித்தால், உங்கள் வருமானம் மேலும் அதிகரிக்கும்.
அதாவது, மொத்த வருவாய்: ரூ.35,87,944
மொத்த முதலீடு: ரூ.25,20,000
வட்டி: ரூ.10,67,944
தபால் அலுவலக RD ஏன் சிறந்தது?
- அரசாங்க ஆதரவு – பாதுகாப்பான முதலீடு
- நிலையான வருமானம்
- நீண்ட கால வருங்கால சேமிப்புக்கான சிறந்த தேர்வு
- மாதந்தோறும் பராமரிக்கக்கூடிய அளவிலான முதலீடு
July 23, 2025 11:23 AM IST

