பத்து பகாட்:
ஆயிர் ஹித்தாம் அருகே தெற்கு நோக்கி செல்லும் பிளஸ் விரைவுச்சாலையின் 80.7 கிலோமீட்டர் பகுதியில் ஒரு பயணிகள் பேருந்து மற்றும் இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 12.44 மணிக்கு ஏற்பட்டது என்றும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் 46 பேர் இருந்தனர், அதில் 44 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் என்று ஆயிர் ஹித்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் இஸா மாஸ்நுண் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக எங்கள் குழுவினர் சென்ற போது, பேருந்தில் பயணம் செய்த 43 மற்றும் 44 வயதுடைய இரண்டு ஆண்கள் பேருந்தில் சிக்கி உயிரிழந்தனர்.” என்றார்
மேலும், 14 ஆண்கள், 1 பெண் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மீதமுள்ள 27 ஆண்கள் மற்றும் 1 பெண் காயமின்றி உயிர்தப்பினர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கிக்கொண்ட லாரி மற்றும் டாங்கர் லாரியின் ஓட்டுநர்களும் (வயது முறையே 42 மற்றும் 33) எந்தக் காயமும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கூறிய அவர்,
இந்த மீட்பு பணிகள் அதிகாலை 3.02 மணிக்கு முடிவடைந்தது என்றார்.