Last Updated:
கோவாவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, மோடி மற்றும் அமித் ஷா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
காங்கிரஸ் சார்பில் கோவாவில் நடைபெற்ற ‘கோவாவை காப்பாற்றுவோம்’ பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, “என் மீது 45க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் உள்ளன. ஆனால், நரேந்திர மோடி வாக்குகளைத் திருடினார் என நான் பேசியதற்காக என் மீது ஒரு வழக்கும் பதிய முடியவில்லை” என பேசியுள்ளார்.
கோவாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது; “வாக்குத் திருட்டை ஞானேஷ் குமார் செயல்படுத்த, அமித்ஷா அதனை நடைமுறைப்படுத்த, நரேந்திர மோடி திரைக்குப் பின்னால் இருந்து இந்த முழுத் திட்டத்தையும் ஒருங்கிணைக்கிறார்.
அமித் ஷா, நரேந்திர மோடி போன்றவர்கள் தொடர்ந்த அவதூறு வழக்குகள் என் மீது 45-க்கும் மேற்பட்டவை உள்ளன. நரேந்திர மோடி வாக்குகளைத் திருடுகிறார் என்று ஒவ்வொரு வாய்ப்பிலும் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இருப்பினும், இந்த ஒரு குற்றச்சாட்டுக்காக என் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஏன் என்று தெரியுமா? ஏனெனில், வாக்குத் திருட்டு தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், அது ஒரு முழுமையான சட்ட நடவடிக்கையைத் தொடங்கிவிடும். அதில் அவர்களே சிக்கிக்கொள்வார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
டெல்லியில் ஞானேஷ் குமார் என்ற ஒருவர் இருக்கிறார். அவரால் இரவில் தூங்க முடியவில்லை; அவருக்கு நிம்மதியே இல்லை. மோடியாலும் அமித் ஷாவாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி, ஒரு கட்டத்தில் இவர்களிடம் கணக்கு கேட்கும் என்பதையும், நீதியை நிலைநாட்டும் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.
வாக்குகளைத் திருடியதன் மூலம், அவர்கள் அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எங்கள் புனிதமான கடமையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். தங்கள் செயல்களுக்கான விளைவுகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள்” என பேசினார்.


