Last Updated:
19 லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸிற்கும், 55 வயதான பத்திரிகையாளர் லாரன் சான்சேவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 55 வயது காதலியை கரம்பிடித்துள்ளார் 61 வயதான அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் பெசோஸ், இத்தாலியின் வெனிஸ் நகரையே விலை கொடுத்து வாங்கினார் என்று கூறும் வகையில் மிக ஆடம்பரமாக திருமணத்தை நடத்தியுள்ளார். வெனிஸில் உள்ள தீவு ஒன்றை முழுமையாக வாடகைக்கு எடுத்த ஜெஃப் பெசோஸ், 5 ஆடம்பர விடுதிகளை புக் செய்தார். அங்கிருந்து தீவுக்கு செல்ல வாட்டர் டாக்ஸிகளையும் விலைக்கு வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பெசோசுக்கு சொந்தமான KORU என்ற 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 417 அடி நீளம் கொண்ட படகில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. தடபுடலாக நடைபெற்ற இந்த திருமணத்தில், உலகப் பணக்காரர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமான விவிஐபிகள் தலைகாட்டினர். குறிப்பாக, பில் கேட்ஸ், இவாங்கா டிரம்ப், நடிகை சிட்னி ஸ்வீனி, தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே, கதர்ஷியன் சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பில் கேட்ஸ், தனது புது காதலியான பவுலா ஹர்ட் உடன் திருமணத்தில் பங்கேற்றதும் கவனிக்கத்தக்கது.
ஆடம்பரத் திருமணத்தை நடத்துவதற்கு அமேசான் நிறுவனர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அவரது திருமணத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு வாரத்திற்கு வெனிஸ் நகரமே ஸ்தம்பிக்கும் எனக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் கடும் எதிர்வினையாற்றினர். அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள், ஜெஃப் பெசோஸின் உருவப்படத்தை ஆற்றில் வீசினர்.
திருமண வரவேற்பு நிகழ்வை வெனிஸில் உள்ள பழமையான அரண்மனையில் நடத்த பெசோஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அரண்மனையைச் சுற்றி பொம்மை முதலைகளை வைத்துப் போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டதால் வரவேற்பு நிகழ்வு இடமாற்றம் செய்யப்பட்டது. எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் வெனிஸ் மேயரின் ஆதரவு பெசோஸ் பக்கம் இருந்தது. இதற்கு அவர் கொடுத்த விலையும் மிக அதிகம் எனக் கூறப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாக இந்த கல்யாணத்திற்கு அமேசான் நிறுவனம், 430 கோடி ரூபாய் செலவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் இதுதான் காஸ்ட்லியான திருமணம் என்றும் கூறப்படுகிறது. காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபித்த ஜெஃப் பெசோஸ், செலவு செய்ய வானமே எல்லை என்ற ரீதியில் காசை வாரி இறைத்துள்ளார்.
June 29, 2025 12:04 PM IST