Last Updated:
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி, உலக ஜனநாயகத்திற்கு “மிகவும் ஆபத்தானது” என்று ஆக்ஸ்பாம் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலகின் டாப் 12 கோடீஸ்வரர்களிடம் உள்ள சொத்து மதிப்பு, 400 கோடி மக்களின் மொத்த சொத்தை விட அதிகமாக உள்ளதாக ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக பில்லியனர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தையொட்டி ஆக்ஸ்பாம் இன்டர்நேஷ்னல், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் டாப் 12 கோடீஸ்வரர்களிடம் உள்ள சொத்து மதிப்பு, 400 கோடி மக்களின் மொத்த சொத்தை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், அமெசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரின், ஓரக்களின் லாரி எலிசன், மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட மொத்தம் 12 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு, 1,665 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய உச்சமாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டுத் தளர்வுகள் மற்றும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு போன்ற கொள்கைகள், இந்த அதீத சொத்து உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் சுமார் 25 கோடி ரூபாய் என்ற கணக்கில் உயர்ந்து வருகிறது. ஒரு சாமானிய மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈட்ட முடியாத தொகையை, இவர்கள் ஒரு நிமிடத்தில் ஈட்டுகிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை என ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
மேலும், வரலாற்றில் முதல்முறையாக பில்லியனர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2025-ஆம் ஆண்டில் மட்டும் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளின் சராசரி வளர்ச்சியை விட 3 மடங்கு அதிகம். 2020-ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், இவர்களின் சொத்து 81 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது 200-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹91 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் ஏழ்மையான 50% மக்களிடம் இருக்கும் மொத்த சொத்தை விட, இந்தியாவின் முதல் 10 பில்லியனர்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு அதிகம் என்று ஆக்ஸ்பாம் கணக்கிட்டுள்ளது. ஒருபுறம் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலகில் நான்கில் ஒருவர் போதிய உணவின்றிப் பசியால் வாடுவதாக அறிக்கை கூறுகிறது. எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட டாப் 12 கோடீஸ்வரர்களுக்கு வெறும் 5% வரி விதித்தாலே, உலகில் நிலவும் வறுமையை ஒழிக்க முடியும் என்றும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க முடியும் என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி, உலக ஜனநாயகத்திற்கு “மிகவும் ஆபத்தானது” என்று ஆக்ஸ்பாம் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


