திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சமீபத்தில் பதிவான ஒருபோக்கு பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 40 நாட்களில் மட்டும் இந்தூரில் 150 திருமணங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதில் 62 சதவீத திருமண ரத்துகளுக்கு, சமூக ஊடகச் செயல்பாடுகளே முக்கியக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 10-ஆம் தேதி வெளியான, தினசரி பாஸ்கர் செய்தியின்படி, திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் கண்டுபிடித்த பழைய பதிவுகள், குறிப்பாக முந்தைய உறவுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பதிவுகள், பல திருமணங்களில் தீவிர மோதல்களை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்கூட கடைசி நேரத்தில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் ஒருவரின் கடந்த காலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு இடமாக மாறியிருக்கும் இந்த காலக்கட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள், உறவுகளின் நிலையை சோதிக்கும் முக்கிய காரணியாக மாறி வருகின்றன.
சமீபத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர பேட்டருமான ஸ்மிருதி மந்தனா மற்றும் இந்தூரைச் சேர்ந்த இசையமைப்பாளரான பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம், திருமண விழாவுக்கு சற்று முன்பாக ரத்து செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க பெரிதாக கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வு, தற்போது அதிகரித்துவரும் திருமண ரத்து போக்கின் ஒரு பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.
அறிக்கையின் படி, திருமண ரத்துகளின் மீதமுள்ள 38 சதவீதம் குடும்பத்தில் திடீர் மரணம், விபத்து, உடல்நலக் கோளாறுகள், பரஸ்பர தகராறுகள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்துள்ளன. இருப்பினும், சமூக ஊடகங்கள் தொடர்பான பிரச்சனைகளே பெரும்பாலான வழக்குகளில் மையமாக இருந்துள்ளன.
பல சம்பவங்களில், ஒருவரின் பழைய சமூக ஊடகப் பதிவுகள், திருமணத்திற்கு முன்பு மீண்டும் விவாதமாக மாறியுள்ளன. இந்தூர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பதிவின்போது மணப்பெண்ணின் பழைய பதிவுகள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு திருமணத்தை ரத்து செய்துள்ளனர்.
இதேபோல், வித்தல் ருக்மணி கார்டன் போன்ற பிரபல திருமண அரங்குகளில் கூட, ஒரே மாதத்தில் உடல்நலக் குறைவு, குடும்பத் தகராறுகள் மற்றும் திடீர் மரணங்கள் காரணமாக மூன்று திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கடைசி நேர ரத்துகள், திருமணத் துறைக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளன. ஹோட்டல்கள், திருமண ஏற்பாட்டாளர்கள், கேட்டரிங் நிறுவனங்கள், இசைக்குழுக்கள், அலங்கரிப்பாளர்கள் உள்ளிட்ட பல சேவை வழங்குநர்கள் தங்களின் முதலீடுகளை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தூரின் ஹோட்டல் சங்கத் தலைவரான சுமித் சூரி தெரிவிப்பதன்படி, இந்த திடீர் திருமண ரத்துகளால் மட்டும் திருமணத் துறைக்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. திருமண முன்பதிவுகள், அலங்கார ஏற்பாடுகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருப்பதால், திடீரென செய்யப்படும் இதுபோன்ற ரத்துகள் முழுத் துறையிலுமே, ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தனிப்பட்ட உறவுகள், நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் நடத்தை போன்றவை இன்றைய காலத்தில் எவ்வளவு நெருக்கமாக இணைந்துள்ளன என்பதை இந்த நிகழ்வுகள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.
December 16, 2025 3:28 PM IST

