மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 358 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 311 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தை கே.எல்.ராகுல் 87 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 78 ரன்களுடனும் தொடங்கினர்.
இருவரும் நிதானமாக விளையாடினர். ஆனால், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 90 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் கில்லுடன், வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கில், டெஸ்ட் போட்டிகளில் தனது 9-வது சதத்தைக் கடந்தார். இந்தத் தொடரில் அவர் எடுக்கும் 4-வது சதமாகும் இது.
சதத்தைக் கடந்த சில நிமிடங்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில், ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில். அவர் 238 பந்துகளில் 103 ரன்கள்(12 பவுண்டரிகள்) எடுத்தார்.
பின்னர் வாஷிங்டன் சுந்தருடன், ரவீந்திர ஜடேஜா இணைந்து பொறுப்புடன் விளையாடினர். மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களாக இருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர் சுந்தரும், ஜடேஜாவும் பொறுமையுடன் விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சாளர்களை மாற்றிப் பார்த்தும் பலனில்லை. இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடி, பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரை சதத்தைக் கடந்தனர். இதன்மூலம் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைக் கடந்து இந்திய அணி முன்னிலை பெறத் தொடங்கியது.
தேநீர் இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களாக இருந்தது. தேநீர் இடைவேளைக்குப் பின்னரும் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நிதானத்துடன் விளையாடினர். 120 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 62 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிவடைகிறது.
5-வது டெஸ்ட்: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டனிலுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ளது.
9-வது சதம்: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 103 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 9-வது சதத்தை விளாசியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்.
722 ரன்கள்: அதேபோல் கேப்டனாக அறிமுகமாகிய ஒரு தொடரில் இதுவரை 722 ரன்களை எடுத்துள்ளார் கில். இதன்மூலம் அணியின் கேப்டனாக அறிமுகமாகி ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 2-ம் இடம் பிடித்துள்ளார் கில். இந்த வரிசையில் சர் டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) 810 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், கிரெக் சேப்பல்(ஆஸ்திரேலியா) 702 ரன்கள் குவித்து 3-வது இடத்திலும், கிளைவ் லாயிட் (மேற்கு இந்தியத் தீவுகள்) 636 ரன்கள் குவித்து 4-வது இடத்திலும், பீட்டர் மே (இங்கிலாந்து) 582 ரன்கள் குவித்து 5-வது இடத்திலும் உள்ளனர்.
4 சதங்கள்: மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் கேப்டனாக அறிமுகமாகி 4 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் செய்துள்ளார். இதற்கு முன்பு வார்விக் ஆர்ம்ஸ்டிராக், பிராட்மேன், கிரெக் சேப்பல், விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் கேப்டனாக அறிமுகமான தொடரில் 3 சதங்களை மட்டுமே விளாசி சாதனை படைத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒரு டெஸ்ட் தொடரில் 4 சதங்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலிலும் ஷுப்மன் கில் இணைந்துள்ளார். இதற்கு முன்பு இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர்(2 முறை 4 சதங்கள் விளாசினார்), விராட் கோலி ஆகியோர் ஒரே தொடரில் 4 சதங்களை விளாசியுள்ளனர்.
மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் 700-க்கும் அதிகமான ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லும் சேர்ந்துள்ளார். இந்தப் பட்டியலில் சுனில் கவாஸ்கர்(2முறை), யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் 700 ரன்களுக்கு மேல் குவித்து இடம்பெற்றுள்ளனர்.