இந்தியாவின் ஆபத்தான மலையேற்றத் தளங்களில் ஒன்றாக அறியப்படும் மகாராஷ்டிராவின் ஹரிஹர் கோட்டையில் சமீப காலமாக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
3,676 அடி உயரத்தில் ஹரிஹர் கோட்டை அமைந்துள்ளது, 60-70 டிகிரி கோணத்தில் செதுக்கப்பட்ட 200 அடி உயரப் பாறைப் படிக்கட்டுகளுக்காகப் பிரபலமானது. இந்த படிக்கட்டுகள் மிகக் குறுகலாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஏறுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஒரு எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஆபத்தான படிக்கட்டுகளில் மக்கள் நெருக்கமாக ஏறுவதும், சில சமயங்களில் விளிம்புகளில் சிறிய இடம்கூட இல்லாமல் நிற்பதும், அமர்வதும் தெரிகிற்து. இது பெரும் விபத்துக்கான வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது.
“மற்றொரு பெரிய சம்பவம் நடக்க காத்திருக்கிறதா? ஹரிஹர் கோட்டை வார இறுதி கூட்ட நெரிசல் ஒரு மரணப் பொறியாகும்! இது தடுக்கப்பட வேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் ஒரு சிறிய கூட்ட நெரிசல் அல்லது யாராவது சமநிலையை இழந்தால், அது ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும் – நூற்றுக்கணக்கானோர் மரணமடைவார்கள்,” என்று அந்த பயனர் எச்சரித்துள்ளார்.
நாசிக்கில் உள்ள வனத்துறை இந்த கோட்டையை கட்டுப்படுத்தி, வருவோரிடம் கட்டணம் வசூலிக்கிறது. அவர்கள் ஒரு நாளைக்கு 300 பார்வையாளர்கள் வரம்பு நிர்ணயித்திருந்தனர், ஆனால் அது அமல்படுத்தப்படவில்லை.
பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்திற்குப் பிறகு, இந்த ஹரிஹர் கோட்டை சம்பவம் பாதுகாப்பு கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.