Last Updated:
புதிதாக வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மார்-ஏ-லாகோ எஸ்டேட் தொடர்பாக சுமார் 38,000-க்கும் மேற்பட்ட குறிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க கோடீஸ்வரர் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களே எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. 2002- ஆம் ஆண்டு முதல் 2005- ஆம் ஆண்டு வரை, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது வீடுகளுக்கு 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வரவழைத்து, அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தினார் என்பது ஜெப்ரி எப்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டு. எப்ஸ்டீன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் ஆகியோருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏஹுத் பராக், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட 150 பிரபலங்களின் பெயர்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம் பெற்றுள்ளன..
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள், எப்ஸ்டீனின் இருண்ட உலகிற்குப் பின்னால் இருந்த அதிகாரமிக்க நபர்களின் பெயர்கள் வெளியே வர வேண்டும் என்று நீதிமன்றங்களில் போராடி வந்தனர். அந்தப் போராட்டங்களின் விளைவாகவே தற்போது இந்தக் கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், எப்ஸ்டீன் கோப்புகள் 60 லட்சம் பக்கங்களைக் கொண்டவை எனவும், தற்போதைக்கு 30 லட்சம் பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மீதமுள்ள பக்கங்களையும் வெளியிடவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எப்ஸ்டீன் கோப்புகளில் அதிபர் டிரம்ப் குறித்த தகவல்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. சுமார் 38,000 முறை அவர் தொடர்பான குறிப்புகள் ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. எப்ஸ்டீனின் தனி விமானமான “லோலிதா எக்ஸ்பிரஸ்” -இல் டிரம்ப் பலமுறை பயணம் செய்ததற்கான ஆவணங்கள் இதில் உள்ளன. 1990-களில் நியூயார்க்கிலிருந்து புளோரிடா மற்றும் பிற இடங்களுக்கு சுமார் 7 முதல் 8 முறை அவர் பயணம் செய்துள்ளார்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் எப்ஸ்டீனின் தனி விமானத்தில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்குச் சுமார் 26 முறை பயணம் செய்துள்ளார். கிளிண்டனின் அறக்கட்டளைக்கு எப்ஸ்டீன் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, பில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவரும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கச் சம்மதித்துள்ளனர்.
2017-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் பிரதமர் மோடி தனது ஆலோசனையின்படியே இஸ்ரேலுக்கு சென்றார் என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. “ஒரு பாலியல் குற்றவாளியின் அர்த்தமற்ற பிதற்றல்கள் இவை” என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இயக்குநர் மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்களும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


