Last Updated:
கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், பிளாஸ்டிக் பாட்டில்களை விட இயற்கையான முறையில் தண்ணீரை குளிர்விக்கும் மண்பானைகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
கோடைக்கால வெப்பம் தீவிரமடைந்து வரும் நிலையில், குளிர்ச்சியான குடிநீரை பெற மக்கள் பாரம்பரியமான மண்பானைகள் மற்றும் களிமண் வாட்டர் பாட்டில்களை அதிகம் நாடத் தொடங்கியுள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள சாலை அகரம் கிராமத்தில், குழாய் பொருத்திய மண்பானைகள், தண்ணீர் ஜாடிகள் மற்றும் களிமண் வாட்டர் பாட்டில்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டில் வழக்கத்தை விட கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், பிளாஸ்டிக் பாட்டில்களை விட இயற்கையான முறையில் தண்ணீரை குளிர்விக்கும் மண்பானைகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மருத்துவர்களும் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த அதிகளவில் தண்ணீர் குடிக்க பரிந்துரைப்பதால், இயற்கையாக குளிர்ச்சியூட்டும் மண்பானை தண்ணீர் மீண்டும் பிரபலமடைந்துள்ளது.
நவீன தேவைகளுக்கு ஏற்ப, களிமண்ணால் அரை லிட்டர் முதல் 1 லிட்டர் வரை வாட்டர் பாட்டில்கள், 5 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை மண்பானைகள், மற்றும் குழாய் பொருத்திய வாட்டர் கேன்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு களிமண் பாட்டிலை தயாரிக்க குறைந்தபட்சம் 8 நிமிடங்கள் ஆகும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் நிரப்பப்படும் தண்ணீர் அரை மணி நேரத்திலேயே இயற்கையாக குளிர்ச்சியை அடைவதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் சென்னை, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட நகரங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம், பாரம்பரிய மண்பாண்ட தொழில் மீண்டும் வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Mar 29, 2026 10:49 AM IST

