Last Updated:
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் அமித் ஷா, ராகுல் காந்தி கலந்து கொண்டனர். ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமாரை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நாட்டின் 26-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளார்.
யார் இவர்?
கேரளாவிலிருந்து 1988-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வுசெய்யப்பட்ட ஞானேஷ் குமார், நாடாளுமன்ற விவகாரத் துறை செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அமித் ஷா நிர்வகித்து வந்த கூட்டுறவுத் துறையின் செயலாளராகப் பணியாற்றிய பின் ஞானேஷ் குமார் ஓய்வு பெற்றார். 2029ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வரை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியானாவிலிருந்து 1989-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வுசெய்யப்பட்ட விவேக் ஜோஷி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தி எதிர்ப்பு
இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் தேர்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டனர். அப்போது, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் பணியை ஒத்திவைக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார்.
இதனை, பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு ஏற்க மறுத்தது. 30 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட 5 பேரில் ஒருவரை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்குத் தேர்வுசெய்தனர். முன்னதாக, தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளதால் அதுவரை தேர்வுக் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi
February 18, 2025 7:27 AM IST