புதுடெல்லி: 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 30 நாடுகளிலிருந்து 2 கோடி பெட்டிகளில் ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமான ஆப்பிள் பெட்டிகள், ஈரான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகி உள்ளன. இவற்றில் ஈரானிலிருந்து ஆப்பிள் பெட்டிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவதாக புகார்களும் உள்ளன.
இந்த இறக்குமதியானது, தென் ஆசியாவின் தடையற்ற தொழில் பகுதி காரணமாக, ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் தரம் குறைந்த பழங்களாகவும் உள்ளன. இதனால், இந்தியாவில் ஆப்பிள் பழங்களில் விலை குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இப்பிரச்சினையால் இமாச்சாலப்பிரதேச விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் ஆப்பிள் பழங்களை பெரும் அளவில் குளிர்சாதனக் கிடங்குகளில் பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இமாச்சலப்பிரதேச ஆப்பிள்களின் மதிப்பு குறைந்து வருகிறது. இது அம்மாநில விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இழப்புகளைத் தவிர்க்க, இந்தியாவில் விளையும் ஆப்பிள்களை முழுமையாக விற்பனை செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை முன்வைக்கும் இமாச்சலப் பிரதேச விவசாயிகள், இறக்குமதி வரியையும் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.100 என உயர்த்தவும் வலியுறுத்துகின்றனர்.
தங்கள் மாநில விவசாயிகளுக்காக இமாச்சாலப்பிரதேச அரசும் மத்திய வர்த்தக்கதுறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளது. இக்கடிதத்தில், ‘விவசாயத்துறை அமைச்சர் ஜெகத்சிங் நேகி குறிப்பிடுகையில், ‘இறக்குமதியாகும் ஆப்பிள்களால் இமாச்சலப்பிரதேசம் மட்டும் அன்றி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்திய ஆப்பிள் விவசாயிகள் பிரச்சினையை மத்திய அரசு, உலக வர்த்தக மையத்தில் எழுப்ப வேண்டும். இறக்குமதி வரியை நூறு சதவிகிதமாகவும் உயர்த்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.