Last Updated:
29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 85 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவற்றில் 4 போட்டிகள் முடிந்துள்ளன. 2 போட்டிகளில் இங்கிலாந்தும், 1 போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
4ஆவது போட்டி இந்திய அணியின் அபார பேட்டிங்கால் டிராவில் முடிந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். இந்த மேட்ச்சில் பும்ராவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஆலி போப் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த போட்டியில் 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கஸ் ஆட்கின்சன் பவுலிங்கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து கே.எல். ராகுல் 14 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். 38 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதையடுத்து கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இணை தற்போது களத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் லேசான கனமழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மதிய உணவு நேர இடைவேளை வரையில் இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்ற பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, கேப்டன் சுப்மன் கில் 35 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார். 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 85 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் 2ஆவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
July 31, 2025 8:09 PM IST