ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் அமெரிக்காவின் 3 பில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரான் உடனான மோதல் தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 1.4 பில்லியன் டொலர் முதல் 2.9 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை பென்டகன் முன்னாள் பட்ஜெட் அதிகாரி எலைன் மெக்கஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மேலும், குவைத் விமானம் தவறுதலாகச் சுட்டதில் மூன்று எஃப்-15இ ரக விமானங்கள் விழுந்து நொறுங்கின.
ஈராக் வான்பரப்பில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக்கொண்டதில் ஆறு வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்கள் சேதமடைந்து தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, சுமார் 12-க்கும் மேற்பட்ட அதிநவீன ‘எம்.கியூ-9 ரீப்பர்’ வகை ஆளில்லா உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் வைக்கப்பட்டுள்ள ரேடார் அமைப்புகளும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
கிரீஸ் நாட்டின் சூடா விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ போர்க்கப்பலிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், 3 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இராணுவ சொத்துகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (a)

