Last Updated:
3 நாட்களில் 5,600 பேர் எல்.பி.ஜி.யிலிருந்து பி.என்.ஜி.யுக்கு மாறியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றுவரும் போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோ, டீசல் தட்டுப்பாடு இல்லை என்றாலும், சமையல் எரிவாயு சிலிண்டர் பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது.
மேற்காசிய பிராந்தியத்தில் நிகழும் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் உணவுப் பட்டியல் குறைக்கப்பட்டுள்ளன.
வணிக சிலிண்டர் பாதிப்பு இருக்கும் சூழலில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, சிலிண்டரை அத்தியாவசிய பட்டியலுக்குள் கொண்டுவந்தது. இதனிடையே, பி.என்.ஜி. எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைக் கொண்ட வீடுகளுக்கு வீட்டு எல்.பி.ஜி. விநியோகம் மற்றும் மறு நிரப்பலை தடைசெய்யும் வகையில், மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
மேலும், பதட்டம் காரணமாக மக்கள் அதிகளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதால், முன்பதிவு கால இடைவெளியை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கிடையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்ட கப்பல்கள் ஹர்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவுக்கு வந்ததன் காரணமாக முன்பதிவு தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா, “கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்.பி.ஜி.யிலிருந்து பி.என்.ஜி. இணைப்புக்கு மாறியுள்ளனர். வதந்தி காரணமாக செய்யப்பட்ட எல்.பி.ஜி. முன்பதிவு குறைந்துள்ளது. நேற்று 57 லட்சம் எல்.பி.ஜி. புக்கிங் இருந்த நிலையில் தற்போது வழக்கமான நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.


