ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ரியான் பராக், கடந்த 3 நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு விளையாடியதாகவும் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது.
அப்போது அணியை மெதுவாக கட்டமைக்கத் தொடங்கிய ரியான் பராக், கடைசி 6 ஓவர்களில் டெல்லி அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார். ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் விளாசியதன் காரணமாகவே ராஜஸ்தான் அணியால் வலுவான இலக்கை (185 ரன்கள்) கொடுக்க முடிந்தது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான ரியான் பராக், நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்துஅனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். திறமை இருந்தாலும் கடந்த சில சீசன்களில் ரியான் பராக், ரன்கள் சேர்க்க சிரமப்பட்டார். இறுதிக்கட்ட ஓவர்களில் களமிறக்கப்பட்ட அவர், அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார். ஆனால் இம்முறை ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை, பேட்டிங் வரிசையில் 4-வது வீரராக களமிறக்கி வருகிறது. இந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டு அணியின் நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார் ரியான் பராக்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற ரியான் பராக் கூறும்போது, “நான் மிகவும் கடினமாக உழைத்தேன். கடந்த 3 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தேன், வலி நிவாரணி எடுத்துக் கொண்டேன். போட்டியின் தினத்தில்தான் எழுந்தேன். சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு சீசனுக்காகவும் அதிகம் உழைக்க வேண்டும். உள்ளூர் போட்டிகள் எனக்கு இம்முறை சிறப்பாக அமைந்திருந்தன. அது எனக்கு தற்போது உதவுகிறது. முதல் 4 இடங்களில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் 20 ஓவர்கள் வரை களத்தில் இருக்க வேண்டும். ஆடுகளம் மந்தமாக இருந்தது. பந்துகள் நின்று வந்தன. முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்தது போன்றே இந்த ஆட்டத்தில் நான் செய்தேன்” என்றார்.