பாங்கி,
சாலை போக்குவரத்துத் துறை (JPJ) பட்டியலிட்ட 28 நிறுவனம் (11 சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் 17 பஸ் இயக்குநர்கள்) மொத்தம் RM6.2 மில்லியன் மதிப்பிலான 34,371 நிலுவை சம்மன்களை அவர்கள் இலகுவழியில் செலுத்திக்கொள்ள ஏற்கெனவே தாம் வாய்ப்புக்கு கொடுத்துள்ளதாக JPJ யின் இயக்குனர் ஜெனரல் டத்தோ ஏடி பட்லி ரம்லி தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களுக்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கான அவகாசத்தை, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வழங்கியதைத் தொடர்ந்து, இந்நிறுவனங்கள் JPJ-யை அணுகி உதவி கோரின.
“எங்கள் தரப்பில், சம்மன்களின் சமீபத்திய பதிவுகள் மற்றும் அவற்றுக்கு விரைவான தீர்வு என்ன என்பதில் உதவியளிக்கிறோம். அனைத்து நிறுவனங்களும் தீர்விற்குத் தயாராக உள்ளன என்பது நமக்குத் தெரிகிறது,” எனவும் JPJ யின் இயக்குனர் தெரிவித்தார்.
இன்னும் சில நிறுவனங்கள் தங்களது சம்மன்களை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை என்றும், அவர்களுக்கு ஜூலை 9 முதல் ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீர்வை பெற்றுக்கொள்ள தவறினால், நிறுவன வாகனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன், சரக்கு வாகனங்கள் மற்றும் பஸ்கள் AWAS முறையில் பெறப்பட்ட சம்மன்களுக்கு RM150 கட்டண விகித தள்ளுபடிக்குத் தகுதியானவை என்றும், இந்த சலுகை டிசம்பர் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.