Last Updated:
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இந்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதை மசூத் அசாரே உறுதி செய்துள்ளார். இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இன்னொரு முக்கிய தலைவர் உயிரிழந்த தகவல் உறுதியாகியுள்ளது.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இன்னொரு முக்கிய பயங்கரவாதி உயிரிழந்த தகவல் உறுதியாகியுள்ளது.
காஷ்மீர் பஹல்காம், பயங்கரவாதிகள் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பெயரில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கோட்டில் உள்ள பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நேற்று (7ஆம் தேதி) அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் இந்தத் தாக்குதலில் முக்கிய குறியாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தன் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இந்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதை மசூத் அசாரே உறுதியும் செய்துள்ளார். இதற்கிடையே, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இன்னொரு முக்கிய தலைவர் உயிரிழந்த தகவல் உறுதியாகியுள்ளது.
கந்தகார் விமான கடத்தலை முன்னின்று நடத்தியவரும் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார் இந்திய படைகள் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. அப்துல் ரவூப் தற்போது ஜெய்ஷ்-இ-முகமதுவின் செயல்பாட்டுத் தலைவராக செயல்பட்டு வந்திருக்கிறார்.
1999 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி நேபாளத்திலின் காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு கிளம்பிய IC 814 விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தினர். அந்த விமானத்தில் இருந்த பயணிகளை பணயக்கைதியாக வைத்து இந்திய சிறையிலுள்ள மசூத் அசார் உள்ளிட்ட மூன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென பயங்கரவாதிகள் நிபந்தனை விதித்தனர். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், பயணிகளின் நன்மையை கருதி மசூத் அசார், உமர் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகியோரை விடுவிக்க உத்தரவிட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மசூத் அசார், தனது சொந்த ஊரான பஹவல்பூர் சென்று ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பை தொடங்கி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்.
மசூத் அசார் விடுதலைக்கு காரணமாக அமைந்த கந்தகார் விமான கடத்தல் இந்தியாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவமாக அமைந்தது. இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்து அதனை முன்னின்று செயல்படுத்தியவர் தான் அப்துல் ரவூப் அசார். இவர் மசூத் அசாரின் சகோதரரும் கூட. தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட அப்துல் ரவூப் அசாரை 26 ஆண்டுகளுக்குப் பின் இந்திய படைகள் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் கொலை செய்திருக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
26 ஆண்டுகளுக்கு பின் இந்திய படைகள் செய்த சம்பவம்.. ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் உயிரிழந்த முக்கிய பயங்கரவாதி!


