தோனியிடம் ஃபோட்டோ எடுக்காமல் டெல்லி திரும்ப மாட்டேன் என டெல்லியிலிருந்து சைக்கிளில் சென்னை வந்த ரசிகர் ஒருவர் சேப்பாக்கம் மைதானம் அருகே டெண்ட் அமைத்து தங்கியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரரான கௌரவ் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியின் தீவிர ரசிகராவார். தோனியின் மீது ஏற்பட்ட தீவிர காதலால் அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளார்.
2100 கிலோ மீட்டர் தூரத்தை 26 நாட்களாக சைக்கிளில் பயணித்து அவர் ஒருவழியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்தடைந்த கௌரவ் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அங்கு பேருந்திலிருந்து தோனி இறங்கியதை கண்டு ஆர்ப்பரித்துள்ளார். தோனியிடம் போட்டோ எடுக்க கோரிக்கை வைத்த போது காவலாளிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
பின்னர் தோனியின் தீவிர ரசிகனான சென்னையை சேர்ந்த சரவணனை சந்தித்து சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜாஸ்தான் ராயல்ஸ் அணி மோதிய போட்டிக்கான டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இவரது எதிர்பார்ப்பையும் போராட்டத்தையும் அறிந்த சரவணன் டிக்கெட் வழங்கி போட்டியை பார்க்க அழைத்துச்சென்றுள்ளார்.
சேப்பாக்கத்தில் போட்டியை கண்டு ரசித்த கௌரவ் தோனியிடம் எப்படியாவது போட்டோ எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவரால் சி.எஸ்.கே நிர்வாகத்தையும், தோனியையும் நெருங்க முடியவில்லை.
தோனியிடம் போட்டோ எடுக்க முடியவில்லையே என மனமுடைந்து கௌரவ் அவருடன் போட்டோ எடுக்காமல் டெல்லி திரும்ப மாட்டேன் என உறுதிபூண்டு சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே டெண்ட் அமைத்து தங்கியுள்ளார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான விளையாடுவதற்காக பெங்களூரு சென்றுள்ளது.
சென்னையில் தற்போது தோனி இல்லையென்றாலும் 24ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் பிளே ஆஃப் மற்றும் 26 ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு வருவார் அவரை எப்படியாவது பார்த்து போட்டோ எடுக்க வேண்டும் என்றும் அதுவரை இங்கேயே தங்கியிருப்பேன் எனவும் கூறுகிறார் கௌரவ்.
அத்துடன் மற்ற ரசிகர்களை போல் மைதானத்தில் ஏறி குதித்து தோனியை கட்டிப்பிடிக்க தைரியம் இருந்தும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன் எனவும் தவறான செயலுக்கு முன் உதாரணமாக இருக்க மாட்டேன் எனவும் கூறுகிறார் கௌரவ்
இதையும் படிங்க:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர பொது கலந்தாய்வு எப்போது? – வெளியான முக்கிய அப்டேட்
ரசிகர்களுக்காகத்தான் தோனி 42 வயதிலும், காயங்களுடனும் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் என்று சொல்லப்படும் நிலையில் தன் தீவிர ரசிகனான கௌரவை சந்திக்க நேரம் ஒதுக்குவாரா தோனி?
.
&w=750&resize=750,375&ssl=1)
