2023-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 20.71 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.
இது குறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2023 ஜனவரி முதல் நவம்பா் வரையிலான கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் இந்தியாவிலிருந்து 20.71 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 1.17 சதவீதம் குறைவாகும்.
அப்போது நாட்டின் தேயிலை ஏற்றுமதி ரூ.20.60 கோடியாக இருந்தது. 2022-ஆம் ஆண்டு முழுவதும் இந்தியா 23.11 கோடி தேயிலையை ஏற்றுமதி செய்தது. 2023-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களை உள்ளடக்கிய வட இந்தியாவிலிருந்து தேயிலை ஏற்றுமதி 12.53 கோடி கிலோவாக இருந்தது. இந்த அளவு முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 13.22 கோடி கிலோவாக இருந்தது.
2023-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதியான தேயிலையின் அளவு 8.19 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் 7.74 கோடி கிலோவாக இருந்தது. தற்போதைய சா்வதேச சூழல் காரணமாக ஈரானிடமிருந்து தேயிலைக்கான தொகை பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் தேயிலை ஏற்றுமதிச் சந்தையில் அந்த நாட்டுக்கு 20 சதவீதமாக இருந்த பங்கு தற்போது ஏறத்தாழ பூஜ்ஜியமாகிவிட்டது.
எனவே, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சந்தைகளில் தேயிலை ஏற்றுமதியை மேம்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பரில் நாடு முழுவதும் தேயிலை உற்பத்தி 7.75 கோடி கிலோவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு, முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் 6.45 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதில் சிக்கல்கள் காரணமாக ஈரான் சந்தையில் ஏற்பட்ட அளவு இழப்பு காரணமாக ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காமன்வெல்த் சுதந்திர நாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் ஈரானிய சந்தை 20 சதவீதத்தை கொண்டுள்ளது. மேற்கு ஆசிய நாட்டிற்கான ஏற்றுமதிகள் நிச்சயமற்ாக இருப்பதால், 2023 ஆம் ஆண்டின் முழு காலண்டா் ஆண்டிற்கான ஏற்றுமதி சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டிசம்பா் 2023 இல் மதிப்பிடப்பட்ட உற்பத்தி 77.52 மில்லியன் கிலோவாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 64.53 மில்லியன் கிலோவாக இருந்தது.