2030-க்குள் 26000 பணக்கார குடும்பங்கள்! குடும்பத் தொழில் போதும்.. AI-இல் முதலீடு செய்யும் பணக்காரப் பிள்ளைகள்!
தாத்தா பாட்டி சேர்த்து வைத்த சொத்து அல்லது பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்து இருந்தால் அடுத்தடுத்த தலைமுறையினர் பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் தற்போது இந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வசதி படைத்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு மத்தியில் இது எப்படி சாத்தியம்? என்று தானே யோசிக்கிறீர்கள். அதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் 1Lattice ஆகியவை இணைந்து “தி இந்தியன் ஃபேமிலி ஆபிஸஸ் ரிப்போர்ட் 2026” என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் சில முக்கியமான விஷயங்கள் தெரியவந்துள்ளது. வெளியான அறிக்கையில் தற்போது 300-க்கும் மேற்பட்ட ஃபேமிலி ஆபீஸ்கள் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
ஃபேமிலி ஆபீஸ் என்றால் என்ன?: ஒரு பெரிய தொழிலதிபர் குடும்பம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களுடைய ஒட்டுமொத்த சொத்துக்கள், முதலீடு, வரி மற்றும் வாரிசுரிமை போன்றவற்றை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல நிர்வகிப்பார்கள். இதைத் தான் ஃபேமிலி ஆபீஸ் என்கிறோம்.

இது போன்ற குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல 2030-க்குள் இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடையவிருப்பதையும் அறிக்கை தெள்ளத்தெளிவாக காண்பித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 16,000 பணக்கார குடும்பங்கள் இருந்தது. இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது.
ஆனால் பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 26,000 ஆக உயரக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு தலைமுறையிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்கு மாறப்போகும் பாரம்பரிய சொத்துக்களின் மதிப்பு மட்டும் 1.3 முதல் 1.5 ட்ரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலைவாசி உயர்வுக்கு மத்தியிலும் எப்படி பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று பார்க்கும்போது முன்பை விட தற்போது இது போன்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளை அதிகம் முதலீடுகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஃபேமிலி ஆபீஸ் என்று சொல்லப்படுகிற அதிக சொத்துக்களை கொண்டுள்ள குடும்பங்கள் தங்களுடைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு முதலீடு செய்வதற்கு கற்றுக்கொடுக்கின்றனர்.
அதே போல் இளைய தலைமுறையினரும் மற்றொரு யுத்தியை கையாளுகின்றனர். தங்களுடைய குடும்ப தொழிலிலேயே அதிக முதலீடு செய்யாமல் வளர்ந்து வரும் ஸ்டார்ட் நிறுவனங்கள் குறிப்பாக ஹெல்த் டெக்னாலஜி, பின் டெக் நிறுவனங்கள் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இன்று வரையில் குடும்பத் தொழிலில் முடங்கிக் கடந்த கோடிக்கணக்கான ரூபாய் இன்று அடுத்த தலைமுறை மூலம் பிற திட்டங்களுக்கும் நகர இருக்கிறது. இது உண்மையிலேயே இந்திய பொருளாதாரத்தின் திசையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

