கோலாலம்பூர்:
மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய தனது முதல் தடுப்பூசியை 2028-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மலேசியா ஆயத்தமாகி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
மலேசியாவில் முதன்முதலாகத் தயாரிக்கப்படவுள்ள ‘பிசிவி13’ (PCV13) தடுப்பூசி, நிமோனியா (Pneumonia) மற்றும் மூளைக்காய்ச்சல் (Meningitis) போன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்கும் 13 வகையான பாக்டீரியா/நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் திறன் கொண்டது.
இத்தடுப்பூசியை மலேசியாவின் முன்னணி நிறுவனமான ‘ஃபார்மானியாகா’ (Pharmaniaga) தயாரிக்கவுள்ளது. இதற்காகச் சீனாவில் உள்ள பிரபல தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறவுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்தே மலேசியா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து வருகிறது.
“உள்நாட்டிலேயே தடுப்பூசிகளைத் தயாரிப்பது, எதிர்காலத்தில் வரக்கூடிய சர்வதேசச் சுகாதார நெருக்கடிகளையும் பெருந்தொற்றுகளையும் எதிர்கொள்ள நம் நாட்டைத் தயார்நிலையில் வைக்கும். மேலும், நீண்டகாலமாக வெளிநாடுகளையே நம்பியிருக்கும் போக்கிற்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும்.”
கோவிட்-19 பெருந்தொற்றுச் சமயத்தில் தடுப்பூசி போன்ற அத்தியாவசிய மருத்துவத் தொழில்நுட்பங்களில் சுயசார்பு இல்லையெனில் எத்தகைய அபாயங்கள் ஏற்படும் என்பதை உலகம் உணர்ந்துள்ளதாகவும், அதை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



