Last Updated:
இரு சீனியர் வீரர்களும் 2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2027 உலகக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான திட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. மூத்த வீரர்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் 2027 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் (ODI) மட்டுமே விளையாடுகின்றனர். ரோஹித் ஷர்மா ஒருநாள் அணியின் கேப்டனாகவும், விராட் கோலி முக்கிய வீரராகவும் அணியில் தொடர்கிறார்கள்.
இரு சீனியர் வீரர்களும் 2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வாக வேண்டுமெனில், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் போட்டி இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கவில்லை என்றால், அவர்களுக்கு உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக இந்திய அணியின் ஒருநாள் தொடர் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் பங்கேற்கவுள்ளனர். இருப்பினும் அவர்களால் விஜய் ஹசாரே தொடரில் விளையாட முடியுமா என்பது கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இரு சீனியர் வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்காவிட்டால் அவர்கள் ஓய்வை அறிவிப்பதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இதில் சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் பாராட்டை பெற்றுள்ள நிலையில் அவரையை 3 ஃபார்மேட்டிற்கும் கேப்டனாக நியமிக்கலாமா என்ற ஆலோசனையில் பிசிசிஐ அதிகாரிகள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
August 10, 2025 12:47 PM IST


