2026-க்குள் ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கம் விலை! இனி தங்கம் வாங்கவே முடியாதா? வெளியான ஷாக்கிங் தகவல்!
தங்கத்திற்கென்று தனி அறிமுகம் தேவையில்லை. தலைமுறை தலைமுறையாக நம் நாட்டினர் தங்கத்தில் தான் முதலீடு செய்து வந்தனர். ஆனால் மக்கள் தங்கத்தை வாங்கும் வடிவம் தான் மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகளாக வாங்கி சேமித்தனர். அதன் பின்னர் கோல்ட் காயின்கள் மற்றும் கோல்ட் பார்கள் வாங்கினர். ஆனால் இன்றோ டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எப்படி பார்த்தாலும் முதலீடு என்று வரும்போது அங்கு தங்கம் முதன்மை வகிக்கிறது. இதனாலோ என்னவோ தினசரி அடிப்படையில் தங்கம் விலை உயருமா? அல்லது குறையுமா? என்று மக்கள் கவனிக்கின்றனர்.
தங்கம் விலை குறைந்தாலும் சரி.. உயர்ந்தாலும் சரி.. அது குறிப்பிட்ட பிரிவினருக்கு நன்மை அளிக்கும். தங்கத்தை முதலீடாக பார்ப்பவர்களுக்கு தங்கத்தின் விலை உயர்வது நல்லது. அதேபோல புதிதாக நகை வாங்க திட்டமிட்டு இருந்தால் அவர்களுக்கு விலை குறைந்தால் தான் ஏதுவாக இருக்கும். இப்படி இருக்கையில் 2026 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் என்று ஜேபி மார்கன் குளோபல் ரிசர்ச் நிறுவனம் கணித்துள்ளது.
2025-ஆம் ஆண்டை யாராலும் மறக்க முடியாது. அந்த வருடத்தில் மட்டும் தங்கம் கிட்டத்தட்ட 65 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்கி வைத்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் 2026-ஆம் ஆண்டின் ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில் தங்கத்தின் விலையில் அவ்வளவாக மாற்றம் இல்லாமல் அப்படியே தேக்க நிலையில் இருக்கிறது. இதனால் இனி தங்கம் விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜேபி மார்கன் குளோபல் ரிசர்ச் என்ற பிரபல நிறுவனம் தங்கத்தை பற்றிய அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 6000 டாலரை எட்டும் என்று கணித்துள்ளது, அதோடு 2027-ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,300 டாலராக உயரும் என்றும் கூறியுள்ளது.
ஒருபுறம் முதலீட்டாளர்களுக்கு இது நன்மையாக இருந்தாலும்.. மறுபுறம் தங்கத்தை வாங்கவிருக்கும் இந்தியர்களுக்கு இது பிரச்சனையாக மாறும் வாய்ப்புள்ளது. இந்திய வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகளை எல்லாம் சேர்த்து உள்நாட்டில் 10 கிராம் தங்கம் ரூ.1,52,000 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. அதுவே ஒரு அவுன்ஸ் தங்கம் 6000 டாலராக உயரும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,83,000 ரூபாயாக அதிகரிக்கும்,
இதில் ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரி ஆகியவற்றையெல்லாம் சேர்த்து பார்த்தால் வாடிக்கையாளர்கள் 10 கிராமுக்கு 2,02,000 ரூபாய் செலுத்த வேண்டி வரும். அதுவே ஒரு அவுன்ஸ் தங்கம் 6300 டாலராக அதிகரித்தால்.. 2027-ஆம் ஆண்டுக்குள் வாடிக்கையாளர்கள் 10 கிராம் தங்கத்திற்கு ரூ.2,12,000 செலுத்த வேண்டி வரும். இதில் மேக்கிங் சார்ஜஸ் மற்றும் கடைகாரர்களின் லாபம் ஆகியவையும் அடங்கும். இந்த விலை உயர்வு எட்டும்பட்சத்தில் தற்போதைய விலையில் இருந்து 40 சதவீதம் வரை தங்கம் விலை அதிகரிக்கும்.
2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஈரான் அமெரிக்கா போர். ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சப்ளை குறைந்து விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. பணவீக்கமும் அதிகரித்துள்ளதால் வட்டி விகிதம் குறையாமல் உள்ளது.
இதனால் வட்டி தராத தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்ட தயங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலிலும் ஜேபி மார்கன் நிறுவனம் பாசிட்டிவான கணிப்பை வெளியிட்டிருப்பதற்கான காரணம் ஜூன் 19ஆம் தேதி அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அமைதி பேச்சு வார்த்தை காரணமாக ஒரு சில நாட்களாகவே தங்கம் 4300 டாலர் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல ஒரு பேரல் கச்சா எண்ணெய் 83 டாலருக்கும் கீழ் குறைந்திருப்பதோடு, அமெரிக்க டாலர் குறியீடும் 99.67 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால் உலகளவில் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றன.
எது எப்படியோ ஜேபி மார்கனின் இந்த கணிப்பு உண்மையானால் இன்று ஒரு கிராம் தங்கம் 15,000 ரூபாயாக இருக்கும்போது விலை அதிகமாக இருக்கிறதே என்று எண்ணும் நாம்.. அப்போதே வாங்கி இருக்கலாம் என்று யோசிக்கும் வாய்ப்புள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

