Last Updated:
பிரேசிலுக்குப் பிறகு (1962) தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் அர்ஜென்டினாவின் கனவு மெஸ்ஸியின் தலைமையில் சாத்தியமாகுமா?
2026 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ள நிலையில், இது அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாக இருக்குமா என்ற விவாதம் உலகளவில் எழுந்துள்ளது. நியூ ஜெர்சியில் நடைபெறவுள்ள இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாகப் பேசிய அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni), இது மெஸ்ஸியின் சர்வதேச விடைபெறும் போட்டியா என்பது குறித்து எவ்வித யூகங்களையும் வெளியிட மறுத்துவிட்டார்.
மெஸ்ஸியை ஒரு வாழும் புகழ்பெற்ற ஆளுமை என்று குறிப்பிட்ட ஸ்கலோனி, 39 வயதில் அவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அணியை வழிநடத்திச் சென்றிருப்பது நம்பமுடியாத ஒரு சாதனை என்றும், ரசிகர்கள் இந்தத் தருணத்தைக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்திய நேரப்படி திங்களன்று நள்ளிரவு 12.30-க்கு நடைபெறும் இறுதிப் போட்டி மெஸ்ஸியின் கடைசி சர்வதேசப் போட்டியா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவரிடமே கேளுங்கள். அதுபற்றி எனக்கு எந்த யோசனையும் இல்லை. அவர் எங்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். எனவே, இந்தத் கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று ஸ்கலோனி பதிலளித்தார்.
1986-ல் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை வென்று தந்த டியாகோ மரடோனா 2020-ல் மறைந்ததைத் தொட்டுப் பேசிய ஸ்கலோனி, மரடோனா இல்லாத இந்தத் தருணத்தில் மெஸ்ஸியின் ஆட்டத்தை நாம் ரசித்து கொண்டாட வேண்டும் என்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள் மற்றும் ஒரு உலகக் கோப்பை எனத் தொடர்ந்து உயர்மட்ட கால்பந்தில் அர்ஜென்டினா நிலைத்து நிற்பது இந்த அணியின் அசாத்திய உழைப்பைக் காட்டுகிறது என்றும், இறுதிப் போட்டியில் தோற்றாலும் இந்த ஐந்து ஆண்டுகால பயணம் மறக்க முடியாத ஒன்று என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கேப் வெர்டே, எகிப்து, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றுகளில் அர்ஜென்டினா அணி கடைசி நேர கோல்கள் மூலமாகவே த்ரில் வெற்றி பெற்று இறுதிக்கு வந்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியின் இரண்டாம் பாதியில் அணி காட்டிய அதிரடி ஆட்டம் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாக ஸ்கலோனி கூறினார். பிரேசிலுக்குப் பிறகு (1962) தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலகக் கோப்பையைத் தக்கவைக்கும் அர்ஜென்டினாவின் கனவு மெஸ்ஸியின் தலைமையில் சாத்தியமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


