Last Updated:
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, இருண்டு வரும் உலகில் இந்தியா பிரகாசமான ஒளியில் இருப்பதை காட்டுவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2025-26-ல் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக, 2025-26 நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை அவர் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை, வர்த்தகம் சார்ந்த இடர்பாடுகள் என அனைத்தையும் கடந்து உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற இந்தியாவின் சாதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பொருள்கள், சேவையின் நுகர்வு, முதலீடு ஆகியவை சிறப்பாக உள்ளதாகவும், 2026-27 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ரூபாயின் மதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ள போதிலும், இது நாட்டின் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தரவு மையங்கள் பெருகி வருவது மற்றும் மின்சார தேவை அதிகரிப்பு காரணமாக உலகம் முழுவதும் காப்பர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 பொருளாதார ஆய்வறிக்கை: “உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது”


