Last Updated:
2025-26 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரை பயன்பாடு 34 லட்சம் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025-26 சர்க்கரை சீசனிற்கான இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 343.5 லட்சம் டன்னாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2024-25 ஆம் ஆண்டில் பதிவான 296.1 லட்சம் டன் அளவை விட சுமார் 16 சதவீதம் அதிகம் என்று இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் (ISMA) இந்த வாரம் வெளியிட்ட முன்கூட்டிய மதிப்பீடு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2025-ல் எடுக்கப்பட்ட பருவமழைக்குப் பிந்தைய செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையிலான இந்த மதிப்பீடுகள், சமீபத்தில் நடைபெற்ற ISMA-ன் நிர்வாகக் குழு கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இந்த மதிப்பீடானது நாடு முழுவதும் அமைந்துள்ள அதிகம் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டிருக்கும் பரப்பளவு, சாதகமான வானிலை மற்றும் அதிக மகசூல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
2025-26-ஆம் ஆண்டிற்கான மொத்த கரும்பு சாகுபடி பரப்பளவு 57.35 லட்சம் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டில் 57.11 லட்சம் ஹெக்டேராக இருந்ததை விட 0.4 சதவீதம் அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கு நல்ல அளவு பருவமழை செயல்திறன், நீர்த்தேக்க அளவு போதுமானதாக இருப்பது மற்றும் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வலுவான கரும்பு மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை காரணமாகும். அதிக சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதாகவும், பயிர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நீர்த்தேக்க சேமிப்பு போதுமானதாக இருப்பதாகவும் ISMA குறிப்பிட்டுள்ளது. முக்கிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரா, 2025-26 ஆம் ஆண்டில் 130 லட்சம் டன் என்ற சாதனை உற்பத்தியை அடையத் தயாராக உள்ளது, இது கடந்த ஆண்டு 93.51 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்திருந்ததோடு ஒப்பிடும் போது இது கிட்டத்தட்ட 39 சதவீதம் அதிகம் ஆகும்.
அதே போல மேற்கு மாநிலத்தின் கரும்பு பரப்பளவு 13.82 லட்சம் ஹெக்டேரிலிருந்து 14.71 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது, இதற்கு நல்ல மழைப்பொழிவு மற்றும் சிறப்பான நீர்த்தேக்க அளவுகள் உதவியுள்ளன. கரும்பு சாகுபடியின் அதிக பங்கு மற்றும் மேம்பட்ட மகசூல் திறன் இந்த வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில், கரும்பு சாகுபடி பரப்பளவு சுமார் 6 சதவீதம் அதிகரித்து 6.8 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது, மொத்த சர்க்கரை உற்பத்தி 63.5 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2024-25 ஆம் ஆண்டில் 54.89 லட்சம் டன்னாக இருந்தது.
மகாராஷ்டிராவை போலவே இந்த மாநிலத்திலும் நல்ல மழைப்பொழிவு மற்றும் போதுமான நீர்த்தேக்க அளவுகள் பயிர் நிலைமைகளை மேம்படுத்தியுள்ளன, இதனால் கரும்பு மகசூலானது அதிகரித்து சர்க்கரை உற்பத்தி அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ISMA தெரிவித்துள்ளது. மற்றொரு முக்கிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தரபிரதேசம், 2025-26 ஆம் ஆண்டில் 103.2 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய ஆண்டில் 101.01 லட்சம் டன்னாக இருந்தது. கரும்பு சாகுபடி பரப்பளவு சுமார் 3 சதவீதம் (23.30 முதல் 22.57 லட்சம் ஹெக்டேர் வரை) குறைந்தாலும், பயிர் ஆரோக்கியம், நோய் கட்டுப்பாடு மற்றும் ரக வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றங்கள் அதிக மகசூலுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட மாநிலங்களை தவிர மீதமுள்ள மாநிலங்களில் கரும்பு பரப்பளவு மற்றும் உற்பத்தியில் சிறிய வேறுபாடுகள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்றன.
2025-26 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரை பயன்பாடு 34 லட்சம் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய பருவத்தில், 2024-25 இல் 35.01 லட்சம் டன்களாக இருந்ததை விட சற்று குறைவு. இந்த பயன்பாட்டை கணக்கிட்ட பிறகு, நிகர சர்க்கரை உற்பத்தி 309.5 லட்சம் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2024-25 ஆம் ஆண்டில் 261.08 லட்சம் டன்களாக மட்டுமே இருந்தது.
சர்க்கரை உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த சீசனில் இந்தியா கிட்டத்தட்ட 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளதாகவும், குறிப்பாக இந்த சீசனில் 15 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ISMA தெரிவித்துள்ளது. மேலும் molasse மீதான 50 சதவீத ஏற்றுமதி வரியை நீக்கியுள்ளது. கர்நாடக கரும்பு விவசாயிகள் தொடர்பாக நவம்பர் 7 ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதை சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
November 11, 2025 2:29 PM IST


