Last Updated:
நாடு முழுவதும் மழை மற்றும் லேசான பனி என்று கிளைமேட் முற்றிலும் மாறியதன் காரணமாக ஏற்பட்ட வெப்பநிலை வீழ்ச்சியானது, கடந்த மாதத்தில் (நவம்பர்- 2025) நாட்டின் மின்சாரத் தேவை குறைய வழிவகுத்தது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் (நவம்பர் – 2024) மின்சாரப் பயன்பாடு 124 பில்லியன் யூனிட்ஸ்களாக இருந்தது. இந்த நிலையில் குறைந்தபட்ச வெப்பநிலையால், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டின் மின்சாரத் தேவை 0.3 சதவீதம் குறைந்து, 123 பில்லியன் யூனிட்ஸ்களாக குறைந்துள்ளது என்று கிரிசில் இன்டலிஜென்ஸின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய மாதத்தில் (அக்டோபர் 2025), மின் நுகர்வு கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிந்ததைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திலும் மின்தேவை குறைந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. “மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவிய கடும் குளிர் அலை காரணமாக மின் நுகர்வு சுமார் 11 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தானில் குளிர் காரணமாக மின்தேவை 7 சதவீதம் குறைந்துள்ளது” என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் மின்சார உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு (YoY) 0.5 சதவீதம் என்ற அளவில் சற்று உயர்ந்து, நவம்பரில் 134BU-க்களுக்கு சமமாக இருந்தது. RE-அடிப்படையிலான உற்பத்தி கடந்த ஆண்டைவிட 17% அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது இந்த நிதியாண்டில் தொடர்ந்து எட்டாவது முறை உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி ரீதியிலான வளர்ச்சிக்கு அதிகரித்துவரும் திறன் சேர்த்தல் காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை கூறியது.
மறுபுறம், இந்த நிதியாண்டில் நீர் மின்சாரம் ஒவ்வொரு மாதமும் வளர்ச்சி அடைந்துள்ளது, நவம்பரில் ஆண்டுக்கு ஆண்டு 27.6 சதவீத வளர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது. இதற்கு காரணம் வழக்கத்தைவிட அதிகமாகவும், நீடித்த தென்மேற்கு பருவமழையுமென்று கூறப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி இந்த காலாண்டில் இரண்டாவது முறையாகக் குறைந்துள்ளது.
இதன்படி மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரி 72 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 75 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கை நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு 54 மில்லியன் டன்கள் (MT) என்றும், நிலக்கரி இருப்பு 18 நாட்கள் வரை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரத் துறைக்கான விநியோகம் நவம்பரில் ஆண்டுக்கு ஆண்டு 5.5 சதவீதம் குறைந்துள்ள போதிலும், இருப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் துறையின் வெப்ப நிலக்கரிக்கான (thermal coal) தேவை குறைவாக இருப்பதற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில், மின்சாரத் தேவை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையான பொருளாதார செயல்திறன் மற்றும் அதிகரித்துவரும் disposable income ஆகியவற்றால், இந்த நிதியாண்டில் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 1 முதல் 3 சதவீதம் அதிகரித்து 1,715-1,725 பில்லியன் யூனிட்களாக இருக்கும் என்று ஐஏஎன்எஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களால் மின் தேவை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் பொருளாதாரம் அதே பாதையில் தொடரும் என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7 சதவீதமாக தொடர்ந்து வளரும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.
December 05, 2025 8:07 PM IST


