மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது; அதில் 2025-க்குள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், சட்டப்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதோடு, பாஜக அரசு கொண்டுவந்த அக்னிபத் திட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி லக்னெüவில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம். தனியார் துறைகளில் அனைத்து சமூகத்தினரும் பணிபுரிவதை உறுதி செய்வோம். 2029-க்குள் மாநிலத்தில் ஏழ்மையைப் போக்குவோம்.பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; அரசுத் துறைகளிலும் அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
ரூ.500 மதிப்புள்ள மொபைல் டேட்டா அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.
மத்தியில் பாஜக ஆட்சியில் நீடித்தால் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல் சாசனத்தையே மாற்றி விடுவர் என்று சமாஜவாதி கட்சி மட்டுமின்றி நாட்டு மக்களும் அச்சமடைந்துள்ளனர் என்றார்.
62 தொகுதிகளில் போட்டி: உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 62 தொகுதிகளில் சமாஜவாதி கட்சி போட்டியிடுகிறது.
பிற தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 17 தொகுதியிலும், திரிணமூல் காங்கிரஸ் பதோகி தொகுதியிலும் போட்டியிடுகின்றன.