துருதுருவென விளையாடிய குழந்தை ஜெமிமாவை, விளையாட்டின் பக்கம் கைப்பிடித்து அழைத்து சென்றவர் அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ். சகோதரர்களுடன் பல்வேறு விளையாட்டுகளை விளையாடிய ஜெமிமாவிடம் அதீத ஆற்றல் இருப்பதை கண்டறிந்த இவான், பள்ளியில் ஹாக்கி, கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து என அனைத்து குழு விளையாட்டிலும் களம் இறக்கினார். அதில், ஹாக்கி மற்றும் கிரிக்கெட்டில் கை தேர்ந்த ஜெமிமா, முதலில் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகாராஷ்ட்ரா ஹாக்கி அணியில் இடம் பிடித்தார்.
தனது 12 வயதில், அதாவது 2012 ஆம் ஆண்டில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அணியிலும் ஜெமிமாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஹாக்கியா.. கிரிக்கெட்டா என்ற முடிவெடுக்கும் சமயத்தில், ஜெமிமாவை கிரிக்கெட் அரவணைத்துக் கொண்டது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சவுராஷ்ட்ரா அணிக்கு எதிரான போட்டியில் 163 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய மராட்டிய வீராங்கனை ஜெமிமா, இந்திய அணியை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். அதற்கு காரணம், ஸ்மிருதி மந்தனாவிற்கு பிறகு, 50 ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை ஜெமிமா தான்.
இதற்கு கை மேல் பலன் கிடைத்ததை போன்று, 2018 ஆம் ஆண்டில், இந்திய அணியில் விளையாடுவதற்கு ஜெமிமாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, தனது அதிரடியான ஆட்டம் மூலம் இந்திய அணியில் ஜெமிமா தனக்கென தனியிடம் பிடித்தார்.
ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கான இந்திய அணியில் ஜெமிமாவின் பெயர் இடம்பெறவில்லை. அனுபவ வீரர்கள் பலர் இருந்ததால், இளம் வீராங்கனையான ஜெமிமாவிற்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதனால், உடைந்து போன பிஞ்சு மனம், மீண்டும் சரியான வாய்ப்பிற்கு தவம் கிடக்கத் தொடங்கியது.

அதற்கு ஏற்ப, நடப்பு மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாட ஜெமிமாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த வந்த ஜெமிமாவிற்கு, பதற்றம், வெறி என இரண்டும் ஒரு சேர கனன்று கொண்டு இருந்தது.
அதற்கு தீனிப் போடும் வகையில் அமைந்தது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டி. காயம் காரணமாக பிரதிகா ராவல் அணியில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக ஷவாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டார். இதனால், பேட்டிங் வரிசையில் 5 ஆவது இறங்கி வந்த ஜெமிமா, 3 ஆவதாக இறங்கும் வாய்ப்பு கிட்டியது. களம் இறங்குவதற்கு 5 நிமிடம் முன்பு தான், 3 ஆவதாக விளையாடப் போகிறோம் என்பது தெரிந்ததாக கூறிய ஜெமிமா, அதன் பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.
9 ஆவது ஓவரில் களம் இறங்கிய ஜெமிமா, 134 பந்துகளில் 127 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடும் போது 50 ஓவர்கள் பீல்டிங்கில் பம்பரமாய் சுழன்ற ஜெமிமா, அடுத்த சில நிமிடங்களில் இந்தியாவிற்காக பேட்டிங் ஆட இறங்கி போட்டி முடியும் வரை களத்தில் நின்றார். அவரது அதிரடி ஆட்டத்துடன், சோர்வடையாமல் ஆடிய ஆற்றல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சதம் அடிக்கும் போது, பொதுவாக பேட்டை கித்தார் போன்று வைத்து கொண்டாடுவது ஜெமிமாவின் வழக்கம். ஆனால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சதம் அடித்த போதும், இந்திய அணி வெற்றி பெறும் வரை தனது கொண்டாட்டத்தை ஜெமிமா தள்ளிப்போட்டார். இந்தியா வெற்றி பெற்றதும், வழக்கமான கித்தாருக்கு பதிலாக, கண்ணீர் மூலம் ஜெமிமா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இத்தனைக்கும் விதையிட்ட தந்தையை கண்டதும் ஜெமிமாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. மகளின் வெற்றியை கண்ட தந்தையும் வார்த்தை இன்றி ஆனந்தக் கண்ணீரே சிந்தினார். அனைத்தையும் இழந்தாலும், முயற்சி செய்யுங்கள்… கடவுள் உங்களுக்காக போராடுவார் என்ற பைபிள் வாசகத்தை மேற்கொள்ள காட்டிய ஜெமிமா, உண்மையாகவே ஜெயித்து விட்டார்…
October 31, 2025 2:50 PM IST

