சென்னை: அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த வீரர்களில் முக்கியமானவர் வருண் சக்கரவர்த்தி. இந்த நிலையில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு தனக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் குறித்து அவர் பேசியுள்ளார்.
“2021 டி20 உலகக் கோப்பை தொடரில் என்னால் சரியாக செயல்பட முடியாமல் போனதை எண்ணி நான் மனதளவில் சோர்வடைந்தேன். டீமில் வாய்ப்பு கிடைத்தும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை என அப்போது நினைத்தேன். அதன் பிறகு எனக்கு அணியில் மூன்று ஆண்டுகளுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணிக்குள் முதல் முறை நான் விளையாட வாய்ப்பு பெற்றதை விட மீண்டும் வாய்ப்பு பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து நான் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன். அணியில் விளையாட மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கூட இல்லாத காலம் அது.
2021 உலகக் கோப்பை முடிந்த பிறகு எனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தது. ‘நீ இந்தியாவே வரக்கூடாது’ என்றெல்லாம் அச்சுறுத்தி உள்ளார்கள். அதையெல்லாம் கடந்து தான் இங்கு வந்துள்ளேன். ரசிகர்கள் அந்த அளவுக்கு மிகவும் எமோஷனலாக கனெக்ட் ஆகியுள்ளனர். இப்போது என்னை பாராட்டுவதும் அவர்கள் தான். என்னை பெருமையாக பேசுவதையும், தாழ்த்தி பேசுவதையும் கடந்து செல்கிறேன். நான் எனது வேலையை செய்து கொண்டுள்ளேன்” என வருண் தெரிவித்துள்ளார். யூடியூப் வீடியோ பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ல் இந்திய அணியில் அறிமுக வீரராக வருண் சக்கரவர்த்தி விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கான வாய்ப்புகள் அணியில் மறுக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு இந்திய அணியின் விளையாடும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. அதன் பின்னர் அவர் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். விரைவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட உள்ளார்.