Last Updated:
தடை நீங்கி அடுத்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்று அதிரடியான கம் பேக்கை கொடுத்தது.
2018 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. அது குறித்த தகவல்களை சென்னை அணியின் ரசிகர்கள் இன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
சூதாட்டம் தொடர்பாக 2016 – 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை அணி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி அடுத்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்று அதிரடியான கம் பேக்கை கொடுத்தது.
இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்த்து விளையாடியது. புகழ்பெற்ற மும்பை வான்கிடே மைதானத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த மேட்சில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
அந்த அணியின் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அந்த மேட்ச்சில் வாட்சன் 8 சிக்சர் மற்றும் 11 பவுண்டரிகளை அடித்து இருந்தார். சுரேஷ் ரெய்னா 32 ரன்களும், அம்பதி ராயுடு 16 ரன்களும் சேர்த்தனர்.
இந்த போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னை அணி அதிரடியாக கம்பேக் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அந்த போட்டியின் நினைவலைகளை ரசிகர்கள் இன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.


