விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, ஜடேஜா, துரூவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த இருவர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸுக்கு பிறகு இங்கிலாந்து தொடரிலும் இடம்பெற்றுள்ளார். அவருடன், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 638 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றிருக்கிறார். அவரின் சமீபத்திய பார்ம் அவரை டெஸ்ட் அணியில் இடம்பெற வைத்துள்ளது.
தமிழகத்தில் இருந்து டெஸ்ட் அணியில் நிறைய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனினும், 2011க்கு பிறகு ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக தமிழகத்தைச் சேர்ந்த எந்த வீரரும் இடம்பெறவில்லை. கடைசியாக அபினவ் முகுந்த் 2011ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தார். அவருக்கு பிறகு அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இடம்பெற்றாலும் அவர்கள் பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்தனர்.
இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். நீண்ட நாட்களாகவே சாய் சுதர்சனை டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்தது. அது இங்கிலாந்து தொடர் மூலமாக நிறைவேற இருக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu

