Last Updated:
தேர்தல் அமைதியாக நடைபெற்றது என வங்கதேச தேர்தல் ஆணையம் கூறினாலும், 14 இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அடங்கிய கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பெரும்பான்மைக்கு 151 இடங்கள் தேவைப்படும் நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி அடங்கிய கூட்டணி 212 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 70 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்நாட்டில் வங்கதேச தேசியவாத கட்சி ஆட்சி அமைக்க உள்ளதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக இறுதி முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் பிரதமராக தாரிக் ரஹ்மான் விரைவில் பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெற்றது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறினாலும், 14 இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
Feb 13, 2026 12:44 PM IST
200+ தொகுதிகளில் வெற்றி… 20 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தில் ஆட்சியமைக்கிறார் தாரிக் ரஹ்மான்?


