Last Updated:
பரப்பன அக்ரஹார சிறையில் உமேஷ் ரெட்டி உள்ளிட்ட கைதிகள் செல்போன், டிவி உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் இருப்பது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் செல்போன், டிவி என சகல வசதிகளுடன் கைதிகள் கும்மாளம் போட்ட சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இருபது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்… 18 பேர் கொலை வழக்கில் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற ரவுடிக்கு, சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்பட்ட காட்சி தான் இது.. சிறைச் சாலையில் சொகுசு விடுதி போன்று உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது… பரப்பன அக்ரஹார சிறை, கைதிகளின் சொர்க்க பூமியமாக மாறியுள்ளதா? நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது பரப்பன அக்ரஹார மத்திய சிறை. இந்த சிறையில் கொலை வழக்கு முதல் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றவாளிகள் வரை பலருக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அம்பலப்படுத்தும் வகையில் உமேஷ் ரெட்டி என்ற ரவுடி, சிறையில் சகல வசதியுடன் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர், 20 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 18 கொலை வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையாக குறைத்தது. தற்போது, உமேஷ் ரெட்டி பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், சிறையில் இரு ஸ்மார்ட் போன்களுடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அத்துடன், அவரின் அறையில் டிவி உட்பட சொகுசு விடுதி போன்று ஆடம்பரமாக வசதிகளுடன் இருக்கும் காட்சி கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தருண் ராஜு என்பவரும் கைது செய்யப்பட்டு, இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரும், சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியவாறு சமைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வழக்கில் கைதான குற்றவாளியும் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நடிகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலருக்கும் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இது தொடர்பாக சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் குற்றவாளிகள் சிறைக்குள் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்துள்ளார்.
Bangalore,Karnataka
November 10, 2025 10:34 AM IST


