Last Updated:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் 21ஆம் தேதி தொடங்கும் நிலையில், 20ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், வக்ஃபு சட்டத் திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை வரும் 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடத்துவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து வரும் 21ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் துவங்கி நடைபெற இருக்கிறது.
இதில், சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்டு 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இது பற்றி விவாதிக்கவும், விளக்கம் அளிக்கவும் உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எனவே இந்த விவகாரம், மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு, பீகார் தேர்தலில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், வரும் 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம், நாடாளுமன்றத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர் சந்திப்பும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “நாடாளுமன்றம் கூட இருக்கிறது, அவை எழுப்பப்படும் அனைத்து விவகாரத்தையும் நாங்கள் கவனிப்போம். நேற்று ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்தித்தேன். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறேன்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவது எனது பொறுப்பு. எந்த விவகாரத்திற்கும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும். மாறாக சலசலப்பால் எந்த முடிவையும் காண முடியாது” எனத் தெரிவித்தார்.
July 18, 2025 3:08 PM IST


