Last Updated:
Beekeeping Success Story| ஆரம்ப கட்டத்தில் 2 முதல் 5 தேனீ பெட்டிகளை வைத்து இந்த தொழிலை தொடங்கலாம். இதற்கான முதலீடு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களின் தொழில் முனைப்பை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக, நாலுமாவடி அருகே இரண்டு இளைஞர்கள் சுமார் 200 தேனீ பெட்டிகளை அமைத்து, முருங்கைத் தேன் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பமும், மக்களுக்கு சுத்தமான மற்றும் தரமான தேனை வழங்க வேண்டும் என்ற நோக்கமும் இவர்களை இந்த முயற்சியில் ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி சுற்றுவட்டாரமான உடன்குடி, சாயர்புரம், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை மரங்கள் அதிகமாக உள்ளதால், தரமான தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. முருங்கைத் தேன் என்பது பெரும்பாலும் முருங்கை (Moringa oleifera) பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் ஆகும். ஒரு தேனில் சுமார் 80 சதவீதம் ஒரே வகை மலரிலிருந்து சேகரிக்கப்பட்டால், அந்த மலரின் பெயரே அந்த தேனுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் தேனீ பெட்டிகளை அமைத்து, சுத்தமான தேன் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். இயற்கை தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்திலேயே இந்த முயற்சியை தொடங்கினோம். நான் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றுள்ளேன். எனது நண்பர் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்தாலும், தொழில் முனைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்” என்றனர்.
தேனீ வளர்ப்பிற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்றும், வாரத்திற்கு ஒருமுறை பெட்டிகளின் அடிப்பகுதியை சுத்தம் செய்தாலே போதுமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தேன் அறுவடைக்கு உகந்த காலமாக இருப்பதால், இந்த காலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். அதன் பின்னர் தேனீ இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் பெட்டிகளைப் பிரித்து வளர்க்கலாம்.
ஒரு தேனீ பெட்டியில் மூன்று வகையான தேனீக்கள் உள்ளன. ராணி தேனீ முட்டையிடும் பணியை மேற்கொண்டு 2 முதல் 3 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் தேனை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 60 நாட்கள் வரை வாழ்கின்றன. ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே பயன்படுகின்றன.
ஆரம்ப கட்டத்தில் 2 முதல் 5 தேனீ பெட்டிகளை வைத்து இந்த தொழிலை தொடங்கலாம். இதற்கான முதலீடு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும். ஒரு கிலோ தேன் உற்பத்திக்கான செலவு ரூ.300 முதல் ரூ.400 வரை இருந்தாலும், சந்தையில் ரூ.650 முதல் ரூ.700 வரை விற்பனை செய்ய முடியும். மேலும், தேன் மெழுகு போன்ற துணை உற்பத்திகளின் மூலம் கூடுதல் வருமானமும் பெறலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, சாயர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை விவசாயம் அதிகமாக இருப்பதால், தரமான முருங்கைத் தேன் அதிக அளவில் கிடைக்கிறது. எனவே, இயற்கை தொழிலில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், தேனீ வளர்ப்பை ஒரு துணைத் தொழிலாக தொடங்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
