Last Updated:
சுமார் 9.2 லட்சம் கார்கள் அந்த நேரத்தில் விரைவுச் சாலைகளைப் பயன்படுத்தியதாக மதிப்பீடு செய்யப்பட்டது.
ஜப்பானில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கச்சாவடி சேவைகள் 38 மணி நேரமாக செயலிழந்த நிலையில், அதன் வழியாகப் பயணித்தவர்களில் 24,000 பேர் தாமாக முன்வந்து கட்டணத்தைச் செலுத்தியது, அவர்களின் கடமை மற்றும் நேர்மை உணர்வைக் காட்டுகிறது.
ஜப்பானில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட ஒரு பெரும் தொழில்நுட்பச் சிக்கலால் அனைத்து ETC (மின்னணு சுங்கச்சாவடி வசூல்) மையங்களும் 38 மணி நேரத்திற்குச் செயலிழந்தன. இதனால், நாட்டின் பல பகுதிகளில் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன. ஆனால், 24,000 பேர் தாங்களாக முன்வந்து சுங்கக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினர். இது ஜப்பானியக் குடிமக்களின் கடமை உணர்வுக்கான சிறந்த உதாரணமாகப் பாராட்டப்படுகிறது.
ஏப்ரல் 8 முதல் 9 வரை, டோக்கியோவில் உள்ள டோமி மற்றும் சுவோ விரைவுச் சாலைகள், கனகாவா, நாகனோ, ஐச்சி உள்ளிட்ட எட்டு மாகாணங்களில் அமைந்த 106 சுங்கச்சாவடிகளில், கார்களின் ETC அட்டைகளைச் சோதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, நெக்ஸ்கோ சென்ட்ரல் என்கிற விரைவுச் சாலை நிர்வாக நிறுவனம் சுங்கச்சாவடிகளை முழுமையாகத் திறந்தது.
ஜப்பானில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் சற்று மெதுவாகச் செல்ல, கார்டு சோதிக்கப்பட்டவுடன் வாயில்கள் தானாகத் திறக்கப்படும் வகையில், ETC அமைப்பு செயல்படுகிறது. ஆனால், அந்த 2 நாட்களும் பயணிகள் எந்தவிதத் தடையுமின்றி, கட்டணமுமின்றி சுதந்திரமாகப் பயணித்தனர். பின்னர், வழக்கத்திற்கு மாறாக ஆன்லைனில் சுங்கக் கட்டணத்தைத் தாமாகவே செலுத்தினர்.
சுமார் 9.2 லட்சம் கார்கள் அந்த நேரத்தில் விரைவுச் சாலைகளைப் பயன்படுத்தியதாக மதிப்பீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாகப் பயணித்தவர்களுக்கு மே மாதம் தள்ளுபடி வழங்கப்பட்டதோடு, ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு ETC மைலேஜ் திட்டம் வழியாகத் தொகைகள் திருப்பித் தரப்பட்டன.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியதும், பலர் ஜப்பானியர்களின் நேர்மையையும், நம்பிக்கையுடனான சமூக அமைப்பையும் பாராட்டினர். ஒரு பயனர், “ஜப்பான் என்பது ஒரு உயர் நம்பிக்கை சமூகம் தான்” என்று கூற, மற்றொருவர், “அங்கு கிடைக்கும் சேவையைப் பெற்றால் நாமும் பணம் செலுத்தத் தயார் தான்” என்றார். இன்னொரு பயனர், “சுங்கச்சாவடியில் கூட நிறுத்த வேண்டியதில்லை, அற்புதமான அமைப்பு” என்று பாராட்டினார். தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படலாம். ஆனால், குடிமக்களின் கடமை உணர்வு என்பது சமூகத்தின் உயர்ந்த நிலையைக் காட்டும். ஜப்பானின் இந்தச் சம்பவம், நம்பிக்கையும், நேர்மையும் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
July 30, 2025 7:09 AM IST
2 நாட்கள் செயலிழந்த சுங்கச் சாவடிகள்.. தாமாக முன்வந்து கட்டணத்தை செலுத்திய மக்கள்.. நெட்டிசன்கள் பாராட்டு!