அமராவதி:
ஒரே சமயத்தில் 2 கோடிக்கும் அதிகமான பெற்றோரும் ஆசிரியர்களும் பங்கேற்ற சந்திப்பை நடத்தி ஆந்திர மாநில அரசு சாதனை படைத்துள்ளது.
இந்த நிகழ்வில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆசிரியராக மாறி, மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் பாடம் நடத்தினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு ஆந்திராவில் ‘தள்ளிக்கி வந்தனம்’ என்ற திட்டத்தை அறிவித்தார் சந்திரபாபு நாயு.
அதன்படி பள்ளி செல்லும் பிள்ளைகளின் தாயார் வங்கிக்கணக்கில் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் வரவு வைக்கப்படும்.
இந்தத் தொகையில் ரூ.13,000 தாய்க்கும் 2,000 ரூபாய் பள்ளியின் கட்டமைப்புக்கும் வழங்கப்படும்.
ஆந்திராவில் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரசாங்கம் வழங்கும் தொகையை எவ்வாறு பள்ளிக்குச் செலவிடுவது, குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய அளவிலான பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, ஆந்திரா முழுதும் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 2.28 கோடிக்கும் அதிகமான பெற்றோர், ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த சந்திப்பின்போது, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘வளங்கள்’ என்ற தலைப்பிலான பாடத்தை 45 நிமிடங்கள் கற்பித்தார் திரு சந்திரபாபு நாயுடு.
மேலும், கல்வியைச் சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்த விவரங்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.