இதற்கு முன் பிரதமர் மோடி கடைசியாக 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய ஐந்து நாடுகள் ஒரே முறையாக பயணம் மேற்கொண்டார். இந்த முறை, ஜூலை 2 முதல் ஜூலை 9 வரை எட்டு நாட்கள் கானா, அர்ஜென்டினா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். இதில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக பிரேசிலில் நான்கு நாட்கள் தங்க இருக்கிறார்.
2015 ஜூலை மாதத்தில் இதேபோல், ரஷ்யா மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகள் பயணத்திற்காக எட்டு நாள் அவர் செலவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் மற்றொரு 8 நாள் பயணமாக அமெரிக்காவின் 2019ஆம் ஆண்டு பயணம் இருந்தது. இதில், பிரதமர் மோடி, நியூயார்க், ஹூஸ்டன் மற்றும் சிகாகோ ஆகிய மூன்று நகரங்களுக்குச் சென்றார். பின்னர் மோடி ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொண்டார். மேலும் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்வில் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்தார்.
2015ல் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். இது அவரது நீண்ட பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், 2014 இல், அவர் மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜிக்கு 9 நாள் பயணத்தை மேற்கொண்டார்.
இந்த முறை ஜூலை 2 முதல் ஜூலை 9 வரை எட்டு நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் மோடி ஜூலை 2 ஆம் தேதி டெல்லியில் இருந்து கானாவுக்குப் புறப்படுகிறார். இது பிரதமரின் முதல் கானா இருதரப்பு பயணமாகும். மேலும், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கானாவுக்கு இந்திய பிரதமர் செல்கிறார் எனும் சிறப்பும் இருக்கிறது.
தனது பயணத்தின் இரண்டாவது கட்டத்தில், டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூலை 3-4 தேதிகளில் டிரினிடாட் & டொபாகோவிற்கு (T&T) பயணம் மேற்கொள்கிறார். கானாவைப் போலவே டிரினிடாட் & டொபாகோவிற்கும் பிரதமர் மோடியின் முதல் பயணம் இது. மேலும் 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்விலும் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பயணத்தின் மூன்றாவது கட்டத்தில், அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் அழைப்பின் பேரில், பிரதமர் ஜூலை 4-5 தேதிகளில் அர்ஜென்டினாவுக்குச் செல்கிறார்.
தனது பயணத்தின் நான்காவது கட்டத்தில், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில், பிரதமர் ஜூலை 5-8 பிரேசிலுக்குச் சென்று 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். பிரேசிலைப் பொறுத்தவரை இது பிரதமரின் நான்காவது பயணம். இந்த உச்சிமாநாட்டின் போது பிரதமர் பல இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த வாய்ப்புள்ளது.
தனது பயணத்தின் இறுதிக் கட்டத்தில், நமீபிய அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவின் அழைப்பின் பேரில், பிரதமர் ஜூலை 9 ஆம் தேதி நமீபியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார். இது நமீபியாவிற்கு பிரதமரின் முதல் வருகையாகவும், இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பிரதமரின் பயணமாகவும் இருக்கும்.
June 27, 2025 10:24 PM IST