Last Updated:
இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் கூடுதல் பாதுகாப்பு தரும், ஆனால் முதல் நிறுவனம் நிராகரித்த கிளைமை இரண்டாவது நிறுவனம் பெரும்பாலும் ஏற்காது. India காப்பீட்டு கட்டுப்பாடு முக்கியம்.
இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருந்தால் பாதுகாப்பு இரட்டிப்பாக கிடைக்கும் என்ற எண்ணம் பல பாலிசிதாரர்களிடையே உள்ளது. ஆனால் கிளைம் செட்டில்மென்ட் என்று வரும்போது உண்மை என்பது இதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. முதல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு கிளைமை நிராகரித்திருந்தால் இரண்டாவது இன்சூரன்ஸ் நிறுவனமும் பெரும்பாலான சூழ்நிலைகளில் அந்த கிளைமை நிராகரித்து விடுகின்றனர். இது முற்றிலும் நிராகரிப்புக்கான காரணம் மற்றும் பாலிசி சம்பந்தப்பட்ட விதிகளை பொறுத்தது. இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பது உங்களுக்கு ஒரு சில பலன்களை கொடுத்தாலும், முதல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரிஜெக்ட் செய்த ஒரு கிளைமை இரண்டாவது இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது.
காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுவதுமாக தீர்ந்து விட்டாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பாலிசி வரம்பு காரணமாக அறை வாடகைக்கான உச்சவரம்பு அல்லது குறிப்பிட்ட ஒரு மருத்துவ சிகிச்சைக்கான வரம்பு ஏற்கனவே அடையப்பட்டு இருக்கும் பட்சத்தில் இந்த குறைபாட்டை சரிகட்டுவதற்கு இரண்டாவது இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு உதவலாம். இது மாதிரியான சூழ்நிலைகளில் இரண்டு பாலிசிகளை வைத்திருப்பது பாலிசிதாரருக்கு கூடுதல் பொருளாதார பாதுகாப்பு வழங்கும்.
எனினும் பாலிசியை பெறுவதற்கு முன்பு இன்சூர் செய்யப்பட்ட நபருக்கு இருந்த உடல்நல பிரச்சனையை வெளிப்படுத்தாமல் இருப்பது, பாலிசி விலக்குகள் அல்லது மோசடி போன்ற காரணங்களுக்காக ஒரு கிளைம் நிராகரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், இரண்டாவது இன்சூரன்ஸ் நிறுவனமும் அதற்கான செட்டில்மெண்டை வழங்காது. ஒரு குறிப்பிட்ட உரிமைக் கோரலுக்கு ஒரு கஸ்டமரால் ஒரே ஒரு ஆக்டிவ் பாலிசியை மட்டுமே வைத்திருக்க முடியும். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒரு கிளைமை இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் செட்டில் செய்ய முடியாது.
இரண்டு பாலிசிகளை வைத்திருக்கும் போது கிளைம்கள் எப்படி இயங்குகிறது? உங்களுடைய மருத்துவமனை பில் ஒரு பாலிசியின் கீழ் இன்சூர் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாகும் என்பது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயத்தில் இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமும் நீங்கள் தெரிவிக்கலாம். இப்படி செய்யும் போது ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு குறிப்பிட்ட உட்சவரம்பு வரை கேஷ்லெஸ் செட்டில்மெண்ட் வழங்கும். மேலும் இரண்டாவது இன்சூரன்ஸ் நிறுவனம், மீதம் இருக்கக்கூடிய தொகையை ஈடுகட்டும்.
பற்றாக்குறைக்கான இழப்பீடு: முதல் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுடைய உரிமைக்கோரலில் பாதி அளவு காப்பீடு வழங்கியிருக்கும் பட்சத்தில், மீதம் இருக்கக்கூடிய தொகைக்கு நீங்கள் இரண்டாவது இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகலாம். இதனை செய்வதற்கு நீங்கள் முதல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து செட்டில்மெண்ட் செய்ததற்கான கடிதம் மற்றும் அதனோடு மருத்துவமனை ரசீதுகள், ரிப்போர்ட் மற்றும் டிஸ்சார்ஜ் செய்ததற்கான ஆதாரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்: இந்திய காப்பீட்டு கட்டுப்பாட்டு ஆணையமானது உங்களுடைய உண்மையான செலவுகளுக்கு மட்டுமே கிளைம் செய்வதற்கு அனுமதிக்கும். உதாரணமாக, உங்களுடைய மருத்துவமனை பில் 4 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். முதல் இன்சூரன்ஸ் நிறுவனம் 3 லட்ச ரூபாயை செலுத்தி இருந்தால், மீதமிருக்கக்கூடிய 1 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இரண்டாவது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உங்களால் கிளைம் செய்ய முடியும். நீங்கள் செலவு செய்ததை விட அதிகமாக உங்களால் கிளைம் செய்ய முடியாது.
இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பது மிகவும் பயனுள்ள ஒரு பொருளாதார யோசனையாக அமைகிறது. அதிலும் குறிப்பாக அதிக செலவு நிறைந்த மருத்துவ சிகிச்சைகளில் இது உதவியாக இருக்கும். ஆனால் இரண்டு பாலிசிகளை வைத்திருப்பதால் அனைத்து விதமான நிராகரிப்புகளையும் இரண்டாவது இன்சுரன்ஸ் நிறுவனத்திடமிருந்து செட்டில்மெண்ட் பெற்று விடலாம் என்ற எண்ணம் இருப்பது தவறு. எனவே வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் பாலிசி ஆவணங்களை கவனமாக படிக்க வேண்டும், விலக்குகளை புரிந்து கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பதன் மூலமாக கிளைம்கள் நிராகரிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
August 31, 2025 5:46 PM IST
2 இன்சுரன்ஸ் பாலிசி இருக்கா? முதல் இன்சூரர் நிராகரிச்ச கிளைம்க்கு இரண்டாவது இன்சூரர் கிட்ட செட்டில்மெண்ட் வாங்க முடியுமா?


