Last Updated:
608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1000 ரன்களை கடந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் 269 ரன்கள் குவித்தார்.
அதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால், 180 ரன்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 161 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 69 ரன்களும், ரிஷப் பந்த் 65 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 1014 ரன்கள் குவித்துள்ளது.
இதனை தொடர்ந்து 608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
July 05, 2025 9:44 PM IST