தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இவற்றில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது.
டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 22 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் இணைந்த விராட் கோலி – ருதுராஜ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலி சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். கடந்த போட்டியில் அவர் 135 ரன்கள் எடுத்த நிலையில் இன்றைய ஆட்டத்திலும் அவர் சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 53 ஆவது சதம் இதுவாகும்.
102 ரன்களில் கோலி ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்களில் கே.எல். ராகுல் 66 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர் குவின்டன் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் டெம்பா பவுமாவுடன் இணைந்து எய்டன் மார்க்ரம் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். பவுமா 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேத்யூ பிரிட்ஸி – மார்க்கரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
98 பந்துகளை எதிர்கொண்ட மார்க்ரம் 110 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டெவால்ட் ப்ரெவிஸ் 34 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். பிரிட்ஸ்கி 68 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து தென்னாப்பிரிக்கா அணி தடுமாறத் தொடங்கியது.
முக்கிய பேட்ஸ்மேன் டோனி டி சோர்ஸி காயம் காரணமாக 17 பந்துகளில் வெளியேறினார்.
பின்னர் பொறுப்பாக விளையாடிய கேஷவ் மகாராஜ் – கோர்பின் போஸ்க் இணை கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தது. கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ஆவது பந்திலேயே 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.
December 03, 2025 10:11 PM IST

